தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை அதிதீவிரமாக உள்ளது. இதைக் கட்டுப்படுத்த மாநில அரசு ஊரடங்கு உத்தரவை மீண்டும் கடுமையாக்கி உள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் வார நாட்களில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அறிவித்தது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
ஓசூர் அருகே உள்ள ஜுஜுவாடி பகுதியில் வருவாய்த் துறை மற்றும் காவல் துறை அலுவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, நேற்று முதல் (ஏப்.24) கர்நாடகாவில் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் அங்கிருந்து தமிழ்நாடு வழியாக மற்ற பகுதிக்கு செல்லும் வாகனங்களை காவல் துறையினர் தீவிர சோதனை செய்து வருகின்றனர். மேலும், இ.பாஸ் இல்லாமல் வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.