கிருஷ்ணகிரி:ஓசூர் அதிமுக வேட்பாளர் ஜோதிபாலகிருஷ்ண ரெட்டி, தளி பாஜக வேட்பாளர் நரேஷ் குமார் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "ஓசூர் பகுதியில் 13 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். 2019ஆம் ஆண்டு தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில், 600 கோடி ரூபாயில் புதிய தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஓசூர் பகுதியில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
மின்சார இருசக்கர வாகனத் தொழிற்சாலை, ஓசூர் பகுதியில் லித்தியம் பேட்டரி தயாரிக்க தொழிற்சாலை தொடங்கப்பட உள்ளன. ஓசூா் பகுதியில் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மக்களுக்கும், படித்த இளைஞர்களுக்காகவும் அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக ஓசூர் தொழில் வளர்ச்சி அடைகின்ற பகுதியாக உள்ளது.
வாகன நெரிசலை தவிர்க்க ஜூஜூவாடியில் இருந்து 220 கோடியில் 18 கிலோமீட்டர் புறவழிச்சாலை அமைக்க திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. ஓசூர் பகுதியில் சர்வதேச மலர் ஏல மையம் 20 கோடியில் அமைக்கப்படும். பூக்கள் ஏல மையம் அருகில் பிரம்மாண்டமான காய்கறி மையம் அமைக்கப்படும். ஓசூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏழு அம்மா கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.