சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை கிருஷ்ணகிரி: தமிழ்நாட்டில் பத்திரப்பதிவுத் துறை மிகுந்த லாபமீட்டும் துறையாக இருந்து வருகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் தினம் தோறும் பல கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நிலங்கள் வாங்கப்பட்டும் விற்கப்பட்டும் வருகின்றன. இதனால் அந்த பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் கொடிகட்டி பறந்து வருகிறது.
தமிழ்நாட்டின் மாநில எல்லையாகவும், இரண்டு மிகப்பெரிய தொழில் பேட்டைகளான சிப்காட் அமைந்த நகரமாகவும் ஓசூர் மாநகராட்சி விளங்குகிறது. தினமும் தொழில் வளர்சியில் புதிய உச்சத்தையும் எட்டி வருகிறது. வளர்ந்த நகரங்களில் ஆசியாவிலேயே 4 ஆவது இடத்தில் உள்ள ஓசூரில் ஒவ்வொரு நாளும் நிலத்தின் மதிப்பு ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
இதையும் படிங்க: அனுமதியின்றி இயங்கிய ஸ்பா.. விஜய் மக்கள் இயக்க நிர்வாகி மீது விபச்சார தடுப்புப் பிரிவு வழக்கு!
தினந்தோறும் ஓசூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் தடையின்றி பத்திரப்பதிவுகள் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் ஓசூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிகளை செய்ய லஞ்சம் பெறப்படுவதாக புகார்கள் எழுந்தன.
அந்த புகாரின் அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி வடிவேல் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கட்டுக்கட்டாக கணக்கில் வராத பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5 லட்சத்து 4ஆயிரத்து 850 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொறுப்பு துணை பதிவாளர் சகிலா பேகம் மற்றும் தரகரிடம், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் துறை ரீதியான நடவடிக்கைகளும் எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Manipur Violence: பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலம் - முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட தலைவர்கள் கண்டனம்!