கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதிகளில் கேரட், பீட்ரூட், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறி வகைகளும் பழம், கீரை, உள்ளிட்ட தோட்டக்கலைப் பொருட்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. அதுபோலவே ஏக்கர் கணக்கில் முருங்கை மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் காய்கும் முருங்கை காய், கீரை ஆகியவை மார்க்கெட்டுகளில் விவசாயிகள் விற்று வருகின்றனர்.
காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சி: சாலையில் கொட்டப்படும் அவலம்!
கிருஷ்ணகிரி: ஓசூர் பகுதிகளில் முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதால், அவற்றை சாலையில் கொட்டி செல்லும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் வரை 10 முருங்கை காய்களை கொண்ட ஒருக்கட்டு 50 முதல் 70 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது முருங்கையின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. சூளகிரி மார்க்கெட்டில் முருங்கைக்காய் ஒன்று 50 பைசாவிற்கு மட்டும் சிலர் கேட்பதாகவும், பெரும்பாலானோர் வாங்கவே விரும்பாததால், முருங்கைக்காய் கொண்டுவரப்பட்ட வாகனங்களுக்கு மீண்டும் எடுத்துச்செல்ல வாடகை தர வேண்டும் என்பதற்காக விவசாயிகள் மார்க்கெட் சாலையில் வேதனையுடன் அவற்றை கொட்டிவிட்டு செல்கின்றனர்.
அந்த முருங்கை காய்களை சுற்றுப்பகுதி மக்கள் எடுத்து சென்ற மாடுகளுக்கு அவற்றை உணவாக வழங்கி வருகின்றனர். இந்த இழப்பை ஈடுகட்டும் வகையில் நஷ்டஈட்டுத் தொகையை அரசு வழங்கிட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.