கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டையில் கனகதாச சேவா சமிதி டிரஸ்ட் சார்பில் கனகதாசரின் 535-ஆவது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக குறும்பர் சமூக மக்கள் தங்களது குல தெய்வங்களான ஸ்ரீ சிக்கம்ம சிவலிங்கேஸ்வரி தேவி, ஸ்ரீ தொட்டம்மா ஜெகதீஸ்வரி தேவி, ஸ்ரீ லிங்கேஸ்வர ஸ்வாமி, ஸ்ரீ சிக்க வீரம்மாதேவி, பீரேஸ்வர ஸ்வாமி உள்ளிட்ட தெய்வங்களைத் தலை மேல் சுமந்தபடி கலாச்சார கலை நிகழ்ச்சிகளாகிய டொள்ளு குனித, வீரகாசே, வீரபத்திர குனித, கம்சாளே, ஆகிய நடனங்களுடன் ஊர்வலமாகக் கொண்டு சென்றனர்.
தொடர்ந்து பேருந்து நிலைய பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் சுவாமிகளுக்குச் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தலைமேல் தேங்காய்கள் உடைக்கும் விநோத திருவிழா நடத்தப்பட்டது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கும் மேற்பட்டோர் 1,008 தேங்காய்களைத் தலைமேல் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தி கொண்டனர்.