தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடைபெறும்  - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் - விவசாயிகள் போராட்டம்

வருகின்ற 26 ஆம் தேதி திட்டமிட்டபடி, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிராக்டர் பேரணி நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்

By

Published : Jan 25, 2021, 5:40 AM IST

கிருஷ்ணகிரி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஓசூரில் செய்தியாளா்களை சந்தித்தார். அப்போது அவர், "மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி நாடு முழுவதும் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். டெல்லியில் கொட்டும் பனியில், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், 60 நாட்கள் கடந்த நிலையில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

அவர்களது போராட்டத்திற்கு ஆதரவாக கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்.

வரும் 26ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியிலும், நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் டிராக்டர் உள்ளிட்ட வாகன பேரணி நடைபெற உள்ளது. பேரணிகளை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறன. என்ன முயற்சிகளை மேற்கொண்டாலும் அனைத்தையும் முறியடித்து திட்டமிட்டபடி டிராக்டர் உள்ளிட்ட வாகன பேரணிகள் எல்லா இடங்களில் நடைபெறும். மத்திய அரசு தனது பிடிவாத போக்கை கைவிட வேண்டும்.

உலகில் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமை போல வேறு எங்கும் நடப்பது இல்லை. தமிழ்நாட்டு மீனவர்கள் தொழிலுக்கு, உடமைகளுக்கு, உயிருக்கும் பாதுகாப்பு இல்லை. வேறு எந்த தொழிலும் இது போன்ற பிரச்னை இல்லை. தேர்தலின் போது, ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டு மீனவர்களை காப்பாற்றுவதாக மோடி தெரிவித்தார். மற்ற வாக்குறுதிகள் காற்றில் பறப்பது போல அவரது இந்த வாக்குறுதியும் காற்றில் பறக்கிறது. உயிரிழந்த நான்கு மீனவர்களின் குடும்பத்திற்கும் ஐந்து கோடி ரூபாய் இழப்பீடு தொகையை இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெற்று வழங்க வேண்டும்.

இந்திய மீனவர்கள் கொல்லப்படும் போது கண்டுகொள்ளாத அரசாக மோடி அரசு உள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு இலங்கையிடம் உரிய இழப்பீட்டை பெற வேண்டும்.

தமிழ்நாட்டில் மூன்றாம் அணி அமைய வாய்ப்பில்லை. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். தோ்தல் தேதி அறிவிப்புக்கு பின் தொகுதி பேச்சு வார்த்தை நடைபெறும். பெட்ரோல் டீசல் விலையை அரசாங்கம் நிர்ணயிப்பதை விட்டுவிட்டு எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைத்தால் அவை தினந்தோறும் விலையை உயர்த்தி வருகிறது. விலை உயர்வின் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் உயர்கிறது" என்றார்.

இதையும் படிங்க:தமிழ் கலாசாரத்தை பிரதமர் மோடி அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்: ராகுல் காந்தி

ABOUT THE AUTHOR

...view details