கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ஏ. செட்டிபள்ளி கிராமத்தில் வசித்துவருபவர் வெங்கடேஷ்ப்பா (60). இன்று (நவம்பர் 17) தனது வேளாண் நிலத்தில் தக்காளி பறிக்க வெங்கடேஷ்ப்பா குடும்பத்துடன் சென்றுள்ளார்.
தக்காளி பறித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது வீட்டில் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த பத்து சவரன் தங்க நகை, நில ஆவணங்கள் திருடுபோனதைக் கண்டு வெங்கடேஷ்ப்பா அதிர்ச்சி அடைந்தார்.
பின் இது குறித்து பேரிகை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வெங்கடேஷ்ப்பா வீட்டில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆராய்ந்தனர்.
அதில் இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே செல்வது பதிவாகி உள்ளது.
நகை திருட்டு சம்பவ சிசிடிவி காட்சிகள் இந்தக் காட்சிகளைக் கொண்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.