கிருஷ்ணகிரி: ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை காவல் கோட்டத்திற்குள்பட்ட கெலமங்கலம், அஞ்செட்டி, தளி உள்ளிட்ட பகுதிகள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இப்பகுதிகளில் வசிப்பவா்கள் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதாகத் தகவல்கள் வெளியாகின.
காவல் துறை சார்பில் 15 நாள்களுக்கு முன்பாக அரசின் அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருப்போர் அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்குமாறு தண்டோரா மூலம் எச்சரிக்கைவிடுக்கப்பட்டிருந்தது.
19 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்
காவல் துறையினரின் எச்சரிக்கையை மீறி அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், உத்தனப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக நாட்டுத்துப்பாக்கிகளைப் பயன்படுத்திவருவதாக வந்த ரகசிய தகவலின்பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின்பேரில், தேன்கனிக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் கிருத்திகா தலைமையில் ஐந்து தனிப்படை காவலர்கள் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.
இரண்டு நாள்களில் 19 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் இதில் ஒரேநாளில் துப்பாக்கி வைத்திருந்த ஏழு பேர், வெடிமருந்து தயாரித்தவர் என எட்டு பேரைப் பிடித்து விசாரணை செய்தனர். தேன்கனிக்கோட்டை காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் 12 நாட்டுத் துப்பாக்கிகளுடன் 12 நபர்களைக் காவலர்கள் நேற்று (ஜூலை 22) கைதுசெய்தனர்.
இரண்டு நாள்களில் நாட்டுத் துப்பாக்கி விவகாரத்தில் 20 பேர் கைதுசெய்யப்பட்டு, அவர்கள் வைத்திருந்த19 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்செய்யப்பட்டன.
இதையும் படிங்க: 'ஜம்முவில் வெடி பொருள்களுடன் பறந்த ட்ரோன்!'