கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் அங்காளம்மன், பூங்காவனத்தம்மன் கோயில்களில் மயானக்கொள்ளை தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டும் அங்காளம்மன் கோயில் மகா சிவராத்திரி, மயானக்கொள்ளை திருவிழா பிப்ரவரி 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நாளான நேற்று முகவெட்டு எடுத்து ஆற்றங்கரை செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் அலகு குத்தியும் உடல் முழுவதும் எலுமிச்சைப் பழங்களை குத்தியபடி காளி வேடம் அணிந்தும் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அலகு குத்திக்கொண்டு மயானம் செல்லும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, திருத்தேர் மயானம் புறப்படுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தேர் இழுக்கும் நிகழ்ச்சியை அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜமாணிக்கம் தொடங்கி வைத்தார் .
மயான சூறை விழாவையொட்டி, அலங்கரிக்கப்பட்ட தேரில் அங்காளம்மன் ஊர்வலமாக புறப்பட்டு காவேரிப்பட்டினம் நகரின் முக்கிய வீதியான பன்னீர்செல்வம் தெரு, பேருந்து நிலையம் வழியாக ஆற்றங்கரைக்குச் சென்றடைந்தார்.