நாடு முழுவதும் கரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்திவருகிறது. இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் இன்று காலை கேரள மாநிலம் பாலக்காட்டிலிருந்து மூன்று டேங்கர் லாரிகளில் 60 ஆயிரம் லிட்டர் பால் கிருஷ்ணகிரி ஆவினுக்கு வந்தது.
இந்நிலையில், கேரள மாநிலத்தில் கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் அங்கிருந்து வந்த பாலை இறக்குவதற்கும், லாரிகளை பால்பண்ணை உள்ளே அனுமதிக்கக் கூடாது எனவும் தொழிலாளர்கள் மறுப்புத் தெரிவித்தனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி ஆவினில் ஏற்கனவே தினசரி 80 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுவருகிறது.
அதில் உள்ளூர் தேவைகளுக்காக 25 ஆயிரம் லிட்டர் பால் மட்டுமே செலவிடப்படுகிறது. மீதமுள்ள பால் இருப்பில் உள்ள நிலையில் கேரள மாநிலத்திலிருந்து 60 ஆயிரம் லிட்டர் பால் வாங்குவதன் அவசியம் ஏன் என தொழிலாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் கரோனா பீதி உள்ள நிலையில் தற்போது பால்பண்ணையில் பணியாற்றிவரும் தொழிலாளர்களுக்கு எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும், அடிப்படை தேவைகளும் வழங்கப்படாமல் ஆவின் நிர்வாகம் மெத்தனமாகச் செயல்பட்டுவருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இங்கு பணியாற்றிவரும் தொழிலாளர்கள் அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு பணியாற்றிவருகின்றனர். இந்த நிலையில் கரோனா அதிகம் பாதித்த கேரள மாநிலத்திலிருந்து லாரிகள் மூலம் பால் கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்றும், நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்கவேண்டிய அரசே அண்டை மாநிலத்திலிருந்து லாரிகள் மூலம் பால் கொண்டுவருவது எந்த வகையில் பாதுகாப்பாக இருக்கும் என்றும் தொழிலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கிருஷ்ணகிரி ஆவின் தொழிலாளர்கள் அச்சம் இந்நிலையில், இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு ஆவின் துணை பொதுமேலாளர் அந்த லாரிகளை ஆவின் பண்ணைக்குள் அனுமதிக்க உத்தரவிட்டார். இதனால், தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற நிலையில் பணியாற்றி வந்துகொண்டிருக்கக்கூடிய சூழலில் செய்வதறியாது திகைத்துவருகின்றனர்.
இதையும் படிங்க:திருவண்ணாமலையிலிருந்து சொந்த நாடுகளுக்கு செல்லும் பயணிகள்