கர்நாடக மாநிலம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட யானைகள் கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் நுழைந்தன.
தேவர்பெட்டா காடு வழியாக தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு நுழைந்த யானைகள் தேன்கனிக்கோட்டை, நோகனுர், ஊடேதுர்கம், சானமாவு உள்ளிட்ட வனப்பகுதிகளில் பல குழுக்களாக பிரிந்து தஞ்சம் அடைந்துள்ளன.
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ஓசூர் சானமாவு வனப்பகுதியில் சுமார் 30 யானைகள் சுற்றித்திரிந்தன. இந்த யானைகளை இரண்டு நாள்களுக்கு முன்பு தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு வன ஊழியர்கள் விரட்டிய நிலையில் தற்போது மீண்டும் 10 யானைகள் சானமாவு வனப்பகுதிக்குள் தஞ்சமடைந்துள்ளன.