கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. அதில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான கல்லூரி மாணவர்களை தேர்வு செய்தனர். அவர்களுக்கான பணி நியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.
பின்னர் பேசிய அமைச்சர், "கடந்த முறை நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 22 ஆயிரம் பேர் பதிவு செய்திருந்தனர் அதில் ஐந்தாயிர மாணவ- மாணவிகளுக்கு பணி ஆணை உத்தரவு வழங்கப்பட்டது. படித்த அனைத்து மாணவர்களுக்கும் அரசு வேலை கிடைப்பதில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே கிடைத்துவருகிறது. ஆனால் தனியார் துறையில் மாணவர்கள் தங்களுடைய திறமைகளைக் காட்டினால் அரசுத் துறையைவிட தனியார் துறையில் அதிக சம்பளம் கிடைக்கப்பெறுகிறது” என்றார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பேசும்போது, "எந்த மாவட்டத்திலும் ஆட்கள் வேலைக்கு தேவை என்று பதாகைகள் வைப்பது இல்லை. ஆனால் கரூர் மாவட்டத்தில் மட்டும் பல இடங்களில் பதாகைகள் வைக்கப்படுகின்றன. இங்கிருக்கும் ஒவ்வொரு தொழிலதிபரும் தங்களுடைய திறமைகளையும், ஒழுக்கத்தையும் காட்டி பணியாற்றுவதால் கரூர் நகரம் தமிழ்நாடு அளவில் மிகவும் சிறப்படைந்துவருகிறது" என்றார்.
விழாவில் கிருஷ்ணராயபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கீதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டிராஜன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் விஜயா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வேலைவாய்ப்பு முகாமில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்ப்பு