கரூர்:நவீன வகை ஆண்ட்ராய்டு போன்களில் இலவசமாக ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் செயலிகளில் ஆன்லைன் ’பப்ஜி’, ஆன்லைன் ரம்மி விளையாட்டு, ’ஃப்ரீ ஃபயர்’ போன்ற விளையாட்டுகள் சமீபகாலமாக பிரபலமாகி வருகின்றன. பொழுதுபோக்குக்காக விளையாடத் தொடங்கியவர்களுக்கு நாளடைவில் விளையாட்டில் அடுத்த லெவல் அதிகரிக்கப்படுவதால், விளையாட்டில் கூடும் சுவாரஸ்யங்களைப் பெறுவதற்காக இரவு பகலாக தொடர்ந்து விளையாடிக் கொண்டிருப்பவர்கள் அதிகரித்து வருகின்றனர்.
ஆன்லைன் பப்ஜி கேம்களில் உருவாக்கப்படும் ஐடிகள் சிறப்பாக இருப்பின் அதனை விலை கொடுத்து பெற்றுக்கொள்வதற்கு, ஆன்லைனில் விளையாடும் இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். விற்பனை செய்ய விரும்பாதவர்களிடம் ஆயிரக்கணக்கில் பேரங்களும் நடைபெற்றுவருகின்றன.
மற்றொருபுறம் ஆன்லைன் ஹேக்கர்ஸ் மூலமாக ஐடிகளைக் கைப்பற்றி கடவுச் சொற்களை மாற்றிக் கொள்வதினால் மீண்டும் அந்த ஐடியைப் பெற முடியாது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகும் இளைஞர்கள் தற்கொலை வரை தள்ளப்படுகிறார்கள். அதேபோல கரூர் அருகே உள்ள தாந்தோன்றிமலை, சிவசக்தி நகர்ப் பகுதியில் தந்தையைப் பிரிந்து தாயுடன் வசித்து வந்த சஞ்சய்(23), என்ற இளைஞர் நேற்று மாலை தாயின் சேலையை மின்விசிறியில் கட்டி, அதில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்தத் தற்கொலை சம்பவம் குறித்து தாந்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து இளைஞரின் உடலைக் கைப்பற்றி கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் நடைபெற்ற விசாரணையில் உயிரிழந்த சஞ்சயின் செல்போனை கைப்பற்றி போலீசார் பார்த்தபொழுது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.