கரூர்:மாயனூர் காசா காலனியைச் சேர்ந்தவர் மாலதி. இவர் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டம், பாடலூரைச் சேர்ந்த தனசேகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நான்கு வயதில் ஆஷித் என்ற மகன் உள்ளார்.
தனசேகரன் வேலூர் மாவட்ட போதை ஒழிப்பு பிரிவில் மேலாளராக பணியாற்றி வருகிறார். மாலதி மாயனூரில் தாய் தமிழரசி, மகன் ஆஷித் ஆகியோருடன் வசித்து வந்தார். விடுமுறை நாள்களில் தனசேகரன் தனது மகனையும் மனைவியும் பார்க்க கரூர் மாவட்டத்தில் உள்ள மாயனூருக்கு வருவது வழக்கம்.
அந்த வகையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மதுபோதையுடன் தனசேகரன் மாயனூர் வந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகும் தொடர்ந்து அவர் மது அருந்தி வந்த நிலையில், கணவன் மனைவி இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
குடி குடியைக் கெடுக்கும்!
இதனால் விரக்தியடைந்த மாலதி தூக்கிட்டுத் தற்கொலை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. இதில், உச்சக்கட்ட போதையில் இருந்த தனசேகரன், மனைவியைத் தடுக்க இயலாமல், அவர் தூக்கிட்ட சுடிதார் துப்பட்டாவை மட்டும் அறுத்துவிட்டு தூங்கியதாகக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து மாலதி, கழுத்தில் துப்பட்டா சுற்றியபடி உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தார், இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் மாலதியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
தனசேகரன் தற்போது கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறார். முதற்கட்ட விசாரணையில், மாலதி விரக்தியில் தன் வீட்டிலுள்ள மின்விசிறியில் தூக்கிட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததாகவும், மதுபோதையில் இருந்த தனசேகரன் தூக்கிட்டிருந்த துணியை அறுத்துவிட்டு மீண்டும் தூங்கியதும் தெரிய வந்தது.
இதையும் படிங்க: கத்தி முனையில் இளைஞரிடம் செல்போன் பறிப்பு