கரூர்: மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முனைப்புக் காட்டிவருவதை தமிழ்நாடு அரசு கண்டிக்கவேண்டும் என வலியுறுத்தி இன்று கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க சமூக ஆர்வலர் முகிலன் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "தமிழ்நாடு அமைச்சரவையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றியும் ஏழு தமிழர் விடுதலை குறித்து ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்கவில்லை.
எழுவர் விடுதலையை பிரதமர் மோடி தடுக்கிறார் என நாங்கள் சந்தேகிக்கிறோம். எனவே, தமிழ்நாடு சுற்றுச்சூழல் கூட்டமைப்பு சார்பில் கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை தாராபுரத்தில் மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம். கர்நாடகத்தில் ஆளும் பாஜக 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை தொடங்கியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அதற்கு பல்வேறு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியுள்ளது. மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், காவிரி டெல்டா விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.