கரூர் பரமத்தி அருகே கல்குவாரியை மூடக்கோரி போராடியதால் செப்.5ந் தேதி குவாரிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனிடையே அடுத்த இரண்டு நாட்களில் சமூக ஆர்வலர் ஜெகநாதனை கடந்த செப்டம்பர் 9ந் தேதி வாகனம் ஏற்றி கொல்லப்பட்டார்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த ஜெகநாதனுக்கு ஆதரவாக சமூக அமைப்புகள் நடத்திய போராட்டத்தின் காரணமாக கரூர் பரமத்தி போலீசார் இது குறித்து இரண்டு தனிப்படைகள் அமைத்து விசாரித்ததில் கல் குவாரி உரிமையாளர் செல்வக்குமார் கூலிப்படையை ஏவி திட்டமிட்டு லாரி ஏற்றி கொலை செய்துவிட்டு சாலை விபத்து என சித்தரித்த கூலிப்படை தலைவன் ரஞ்சித், கூலிப்படை திட்டத்திற்கு உதவிய லாரி ஓட்டுநர் சக்திவேல் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதனிடையே அவரது உடல் கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரேத பரிசோதனை நிறைவுற்ற பின்னரும் கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக ஜெகநாதன் குடும்பத்தார் மற்றும் சமூக ஆர்வலர் முகிலன் ஆகியோர் தலைமையில் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள உடற்கூறு ஆய்வு மையத்தின் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் திருச்சி மாவட்ட மேலிட பொறுப்பாளர் வேலுசாமி, சாமானிய மக்கள் நலக் கட்சி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் குணசேகரன், தோழர் களம் அமைப்பு நிர்வாகி சண்முகம் மற்றும் சுயாட்சி இந்தியா அகில இந்திய தலைவர் கிறிஸ்டினா , விடுதலை சிறுத்தைகள் கட்சி கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன், மாநில செயற்குழு உறுப்பினர் அகரமுத்து, தமிழ் புலிகள் கட்சி, காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் மூன்று நாட்களுக்கு மேல் நடைபெற்று வரும் காத்திருப்பு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கரூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கீதாஞ்சலி தலைமையிலான அதிகாரிகள் செப்டம்பர் 13ஆம் தேதி காலை 10 மணி அளவில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இருப்பினும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு வேலை மற்றும் நிவாரணத் தொகை தமிழ்நாடு அரசு அறிவிக்கும் வரை உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரியில் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சி நிர்வாகிகள், மற்றும் சமூக ஆர்வலர்கள் பாதிக்கப்பட்ட ஜெகநாதன் குடும்பத்தினர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
மதியம் 12 மணியளவில் அளவில் துவங்கிய பேச்சுவார்த்தை மூன்று மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்றது. ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மேற்பார்வையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துவிட்டதை அடுத்து, போராட்டத்தை தொடங்கியுள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட ஜெகநாதன் குடும்பத்தார் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.