மனிதனால் உருவாக்கப்பட்ட கலைகளில் மிக முக்கியமான கலை, சமையல் கலை. அவ்வாறு சமையல் கலையைக் கற்றுத்தேர்ந்த சமையல் தொழிலாளர்களுக்கு வைகாசி மாதம் சீசன் மாதம் என்பதினால், அனைத்து சமுதாய மக்களின் சார்பிலும் திருமணம், காதணி விழா, மொய் விருந்து உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகளில் பணியாற்றி, அவர்கள் வருமானம் ஈட்டுவர்.
எப்போதுமே பரபரப்பாக காணப்படும் சமையல் தொழிலாளர்கள், இந்த கரோனா ஊரடங்கு காரணமாக, வேலை இன்றித் தவித்து வருகின்றனர். மேலும் சைவம், அசைவம் என இரண்டு வகையிலும் அசத்தும் இவர்களின் நிலைமை தற்போது, மிகவும் மோசமாக உள்ளது.
ஊரடங்கால் சமையல் தொழிலாளர்சமையல் தொழிலாளர்கள் தவிப்புகள் தவிப்பு விருந்து தயாரிப்பதில் கைதேர்ந்த இவர்கள், உணவுக்கு வழியின்றித் தவிக்கும் நிலையில் உள்ளனர்.
இதுகுறித்து கரூர் மாவட்ட சமையல் சங்க நிர்வாகி சந்தானம் கூறுகையில், 'கரூர் மாவட்டத்தில் 2ஆயிரம் சமையல் கலைஞர்களும், 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வேலை வாய்ப்பின்றி கடந்த இரண்டு மாதங்களாகத் தவித்து வருகின்றனர். மேலும் தமிழ்நாடு அரசு எங்களுக்கு சிறு, சிறு வேலைகள் செய்ய வாய்ப்பு அளிக்க வேண்டும். ஏனென்றால், எங்களுக்கு இதைத்தவிர வேறு தொழில் தெரியாது. அதுமட்டுமல்லாது பாதிக்கப்பட்ட சமையல் தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைத்து அரசு உதவி செய்ய முன் வர வேண்டும்' எனத் தெரிவித்தார்.
ஊரடங்கால் சமையல் தொழிலாளர்சமையல் தொழிலாளர்கள் தவிப்புகள் தவிப்பு வேலை இல்லாமல் தவித்து வரும் சமையல் தொழிலாளி கார்த்திக் கூறுகையில், 'அரசு கூறும் நிபந்தனைகளான முகக் கவசம், கையுறை, கிருமி நாசினி, தகுந்த இடைவெளி போன்றவற்றை கடைப்பிடித்து தொழில் செய்வதற்குத் தயாராக இருக்கின்றோம். மேலும் தமிழ்நாடு அரசிடம் இருந்து பணம் அல்லது அரிசி, பருப்பு, காய்கறி என இதுவரை எந்த ஒரு நிவாரணப் பொருட்களும் வழங்கப்படவில்லை. ஒருவேளை அது கிடைத்தால் நன்றாக இருக்கும். பணமாக கிடைக்காவிட்டாலும் ஒரு கிலோ அரிசியாவது தந்து உதவி இருக்கலாம்' என வருத்தத்துடன் தெரிவித்தார்.
மேலும் அவர், 'சமீபத்தில் சமையல் வேலையை விட்டுவிட்டு கீரைக் காய்கறிகள் விற்க பழகிவிட்டோம், நாங்கள். கீரைக்காய்கறிகள் மூலமாக வருமானம் சரியாக கிடைப்பதில்லை. முன்பாக ரூ.500-க்கு, ரூ.1000-க்கு வேலைக்குச் சென்ற சமையல் தொழிலாளர்கள் தற்போது வெறும் ரூ.50-க்கு, ரூ.100-க்கு வேலைக்குச் செல்கிறோம்.
ஆனால், அதுவும் குடும்பத்திற்கு பற்றாக்குறையாக இருக்கிறது. நாங்களாகவே முயற்சி செய்து தான் கிடைக்கிற காய்கறிகளை காட்டிலிருந்து எடுத்து வந்து விற்று கொண்டிருக்கிறோம். கீரை, முருங்கை, தக்காளி போன்ற சிறு, சிறு வியாபாரங்களை செய்து வருகிறோம். இதன் மூலம் ஒரு லாபமும் கிடையாது. வாழ்வாதாரம் இல்லை. எனவே, அரசு எங்களது உணர்வுகளைப் புரிந்துகொண்டு, எங்களுக்கு உதவி செய்ய முன் வரவேண்டும்' என மிகுந்த ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க:'இல்லாதவங்களுக்கு உதவுங்க சாமி...!' - குடிசைகளின் குரல்களுக்கு செவிசாய்க்குமா அரசு?