முதுமைக்கு வேண்டியதை இளமையிலேயே தேடி வைத்துக்கொள்ள வேண்டும். வயதானால் சம்பாதிக்க முடியாது அல்லவா? ஆனால், வறுமை கரோனா வழியில் வந்தால் ஏழை, பாழைகள் என்ன செய்வார்கள். உலகமே கரோனாவைக் கண்டு அஞ்சுகிறது. இந்தியாவில் வாழும் மக்கள் வறுமையின் பிடியில் சிக்கி, அடுத்த வேளை உணவிற்காக சாலையோரம் அலையும் காட்சி கண்களில் கண்ணீரை வரவைக்கிறது.
கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், மக்களின் நடமாட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் விவசாயத் தொழிலாளர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள், கட்டடத் தொழிலாளர்கள் வருமானத்திற்கு என்ன செய்வதென்று தெரியாமலேயே உணவின்றித் தவித்து வருகின்றனர். தங்களது அன்றாடத் தேவைகளான பால், அரிசி, காய்கறி மளிகைப் பொருட்கள் வாங்குவதற்கு கூட திண்டாடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.