தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூரில் யூடிஎஸ் நிதி நிறுவனம் ரூ.38 கோடி மோசடி! - கரூர் நிதி நிறுவனம் மோசடி

கரூர்: யூடிஎஸ் நிதி நிறுவனம் கரூரில் சுமார் 400 பேர்களிடம் ரூ. 38 கோடி மோசடி செய்துள்ளதாகக் கூறி 50-க்கும் மேற்பட்டோர் கரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

karur people
karur people

By

Published : Sep 24, 2020, 11:08 AM IST

கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் யூடிஎஸ் (Universal Trading Solution) என்ற நிதி நிறுவனம் பிரபல நாளிதழ் ஒன்றில் ஒரு லட்சம் ரூபாய் கட்டினால், பத்து மாதங்களில் ரூ. 2 லட்சம் கிடைக்கும் என விளம்பரம் செய்துள்ளனர். இதை, நம்பி கரூர் மாவட்டம் புகளூரைச் சேர்ந்த ரெங்கன் என்பவரும், கரூரைச் சேர்ந்த வீராசாமியும் இந்த நிதி நிறுவனத்தில் லட்சக்கணக்கில் டெபாசிட் செய்துள்ளனர்.

முதல் இரண்டு மாதம் இவர்களுக்கு 20 விழுக்காடு வட்டித் தொகை கொடுத்துள்ளனர். இதை நம்பி ரெங்கன், வீராசாமி ஆகியோரின் உறவினர்கள், நண்பர்கள் இந்த நிதி நிறுவனத்தில் டெபாசிட் செய்துள்ளனர். இதேபோல, கரூர் மாவட்டத்தில் 400 பேர்கள் சுமார் 38 கோடி ரூபாயை இந்த நிதி நிறுவனத்தில் டெபாசிட் செய்துள்ளனர். பணத்தை வசூல் செய்து கொண்ட நிதி நிறுவன நிர்வாக இயக்குநர் கவுதம் ரமேஷ் என்பவர், பணத்தை திருப்பித் தராமல் மோசடி செய்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் 50 நபர்கள் பணத்தை மீட்டுத்தரக் கோரி கரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பகலவனிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

மேலும், இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள யூடிஎஸ் நிதி நிறுவன நிர்வாக இயக்குநர் கோவை பீளமேடு கௌதம் ரமேஷ், ஆனந்த கோபால் (துணைத் தலைவர்), செந்தில் குமார் (ரமேஷ் உறவினர்,) யாமினி (மேலாளர்), உமா (காசாளர்), மதன்கோபால் (மார்க்கெட்டிங் மேலாளர்) ஆகிய ஆறு பேர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தரக்கோரி புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில் யூடிஎஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் கவுதம் ரமேஷ், தற்போது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், இவர் தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளாவிலும் இது போன்று மோசடி செய்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. தமிழ்நாடு, கேரளா போன்ற பகுதிகளில் மொத்தம் சுமார் 500 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.


இதையும் படிங்க:போலி கால்சென்டர் நடத்தி லட்சக்கணக்கில் மோசடி!

ABOUT THE AUTHOR

...view details