கரூர்:கடவூர் வட்டம் வீரணம்பட்டியில் ஆதிதிராவிடர் (பறையர்) மக்களும், பிற்படுத்தப்பட்ட சமூகமான ஊராளி கவுண்டர் சமூகமும் கடந்த நான்கு தலைமுறையாக பகவதி அம்மன், காளி அம்மன் கோவில் திருவிழாவை இணைந்து நடத்தி வந்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற திருவிழாவின்போது, கரகம் எடுக்கும் நிகழ்ச்சியில் தகராறு ஏற்பட்டு காவல் நிலையம் வரை சென்றாக கூறப்படுகிறது.
இதனால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் நடத்தும் மளிகை கடை டீ கடை போன்றவற்றில் பட்டியல் இனத்தவர்களுக்கு பொருட்கள் வழங்குவது இல்லை என முடிவெடுத்து ஊர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வீரணம்பட்டி ஆதிதிராவிடர் மக்கள் அவர்கள் பகுதிக்குள்ளேயே மளிகை கடை, டீக்கடை வைத்துக் கொண்டனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தனித்து, அக்கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்துள்ளனர். மேலும் கும்பாபிஷேக விழாவிற்கு ஆதிதிராவிடர் சமூகத்தில் இருந்து கோயிலுக்குள் உள்ளே யாரும் வரக்கூடாது என கட்டுப்பாடும் விதித்து விழாவை நடத்தியுள்ளனர். மேலும் திருவிழா முழுவதும் பறை இசை முழங்கும் உரிமையும் பறிக்கப்பட்டது.
இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் வைகாசி திருவிழா இந்த ஆண்டு ஜீன்6 ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு கரகம் பாலித்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. ஜூன் 7ம் தேதி புதன்கிழமை காலை கிடாவெட்டு பூஜையில் பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர் சக்திவேல் என்பவர் எப்பொழுதும் போல அனைவரையும் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என கோரி கோயிலில் சாமி கும்பிட்டுள்ளார்.
அப்போது, அவருக்கு திருநீறு தர மறுத்து உள்ளே நுழையக்கூடாது என மற்றொரு தரப்பினர் இளைஞரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அப்பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி, பிற அரசு அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.
அதன் அடிப்படையில் வீரணம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தையில் அனைவரும் ஒருங்கிணைந்து திருவிழாவை நடத்த வேண்டும் என அரசு அதிகாரிகள் கூறியதை ஏற்க மறுத்து, மற்றொரு தரப்பு வெளியேறியதுடன் கிடா வெட்டு நடத்தி திருவிழாவை தொடர்ந்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் புஷ்பா தேவி, ஆதிதிராவிடர் மக்கள் கோயிலுக்குள் நுழைந்து வழிபாடு நடத்த அனுமதி மறுத்தால், கோயிலை அரசு கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் என கூறினார். இதனை ஏற்க மறுத்து அப்பகுதியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலைகளை மறைத்தும், அதிகாரிகளை முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.