கரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில், கடந்த மார்ச் 15ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் கரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து, கடந்த மார்ச் 24ஆம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மத்திய - மாநில அரசுகள் சில தளர்வுகளை அளித்து வருகிறது.
இருப்பினும், இந்த ஊரடங்கால் கரூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.
அதில், கட்டுமானத் தொழிலாளர்கள், ஆட்டோ, நகைத்தொழிலாளர்கள், வாகன ஓட்டுநர்கள், மண்பாண்டம் செய்பவர், முடிதிருத்துவோர், சலவைத்தொழிலாளி, தையல் தொழிலாளி, சுமை தூக்குவோர், சாலையோர வியாபாரிகள் போன்ற அமைப்பு சாரா தொழிலாளர்கள் வருவாய் இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கட்டுமானம், ஆட்டோ தொழிலாளர்களுக்கு நிவாரணமாக ஆயிரம் ரூபாய், 15 கிலோ அரிசி, பருப்பு உள்ளிட்ட சமையல் பொருள்கள் இரண்டு கட்டங்களாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
ஆனால், கட்டுமானம், ஆட்டோ தொழிலாளர்கள் தவிர, மற்ற பல சங்கங்களில் உறுப்பினராக உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தும், இதுவரை எந்த நிவாரண உதவியும் வழங்கப்படவில்லை. இதனிடையே, நிவாரண உதவிகளை எதிர்பார்த்திருந்த அமைப்புச் சாரா தொழிலாளர்களின் குடும்பங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளன.
மனு அளிக்கும் அமைப்புசாரா தொழிலாளர்கள் எனவே, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உடனடியாக நிவாரண உதவி மற்றும் உதவித்தொகை வழங்க வேண்டும். அதேபோல், கடந்த 9 மாதங்களாக ஓய்வு ஊதியம் வழங்கப்படாமல் உள்ள பதிவு செய்யப்பட்ட 15 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என தொழிலாளர் நலச் சங்கம், பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டன.
இதையும் படிங்க:முந்திரி தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு!