கரூர்:வடக்கு பிரதட்சணம் சாலையில் உள்ள அலுவலகத்தில் இன்று (டிச.29) மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் விவசாய நிலங்களில் உள்ள இலவச மின் இணைப்புகளில் மீட்டர் பொருத்தப்பட்டு வரும் பணிகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை முன்னுக்குப் பின் முரணானது. இனி வருங்காலங்களில் உண்மை நிலையைத் தெரிந்துகொண்டு அறிக்கைகளை வெளியிட வேண்டும். இருப்பினும் ஒன்று, இரண்டு குறைகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயிகளுக்கு ஒரே ஆண்டில் ஒரு லட்சம் புதிய இலவச மின் இணைப்புகளை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதற்கானப் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.
சூரிய மின் உற்பத்தியில் 4000 மெகாவாட் அளவிற்கு உற்பத்தியை அதிகரிக்கும் பணிகள் நடப்பாண்டில் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல நீரோட்டம் மூலம் மின் உற்பத்தி சுமார் 3000 மெகாவாட் அளவிற்கு கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மின்சார வாரியத்தின் சொந்த உற்பத்தி 53 விழுக்காடு மட்டுமே, மீதமுள்ளவற்றை தனியாரிடம் இருந்து பெற்று மின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. 8 ஆயிரத்து 905 மின்மாற்றிகள் புதிதாக மாற்றியமைக்க கணக்கெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை 6 ஆயிரம் புதிய மின்மாற்றிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.