கரூர்:ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த சோழ காளிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரூபா (42). இவரது கணவர் தங்கராசு, கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். ரூபா, ஈரோடு மாவட்டம் சென்ன சமுத்திரம் பேரூராட்சி வார்டு கவுன்சிலராக (திமுக) பொறுப்பில் உள்ளார். இவர் கரூர் மாநகரப் பகுதியில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று வழக்கம்போல் வீட்டிலிருந்து புறப்பட்டு கரூர் சென்ற இவர், இரவு வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று (செப்.26) பிற்பகல் கரூர் மாவட்டம் பவுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலமலை முருகன் கோயில் அருகிலுள்ள காட்டுப்பகுதி ஒன்றில் தலை நசுங்கிய நிலையில், அரை நிர்வாணத்துடன் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த க.பரமத்தி காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரூபாவின் உடலைக் கைப்பற்றினர்.
பின்னர் உடலை உடற்கூராய்விற்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து க.பரமத்தி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். தொடர்ந்து, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில், அரவக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், இன்று (செப்.27) க.பரமத்தி காவல் துறையினர் வழக்குப் பதிந்து, கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு மேற்கொண்டு, கொலை செய்யப்பட்ட திமுக கவுன்சிலர் ரூபாவின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே விசாரணையை தீவிரப்படுத்திய காவல் துறையினர், சந்தேகத்தின் அடிப்படையில் ரூபாவின் உறவினர்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் நித்தியா என்பவர், அவரது கணவரின் உதவியுடன் திட்டமிட்டு திமுக கவுன்சினர் ரூபாவை கொலை செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. தினந்தோறும் கொலை செய்யப்பட்ட ரூபாவுடன் பேருந்தில் பயணித்து வந்துள்ளார், நித்தியா. இதன் மூலம் ரூபாவுக்கு அறிமுகமான நித்தியா, வீட்டு வேலைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, பவுத்திரம் பாலமலைப் பகுதியில், ரூபாவிடமிருந்த 7 சவரன் தங்க நகை, தோடு, வெள்ளிக் கொலுசு ஆகியவற்றை பறித்துக் கொண்டு கொடூரமான முறையில் கொலை செய்ததை விசாரணையில் ஒப்புக் கொண்டார்.
மேலும், கொலைக்கு உடந்தையாக இருந்த நித்தியாவின் கணவர் கதிர்வேல், தடயங்களை அழிக்க முயற்சி செய்ததாக தனிப்படை காவல் துறையினர் இருவரையும் கைது செய்து இன்று மாலை க.பரமத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். திமுக கவுன்சிலர் ரூபாவின் கொலை வழக்கில், சம்பந்தப்பட்ட நபர்களை கொலை செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் விரைந்து செயல்பட்டு கைது செய்ததையடுத்து, கரூர் காவல் துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தனிப்படை காவல் துறையினருக்கு பாராட்டைத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொலை செய்யப்பட்ட ரூபா குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகத்தின் கரூர் மாவட்டச் செயலாளர் முல்லையரசு, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், பட்டப்பகலில் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் வகையில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தேறி வருகிறது என்றும், திமுக கவுன்சிலராக உள்ள பெண்ணுக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண மனிதர்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என்றும், திமுக ஆட்சியில் அந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கேடு இருப்பதாக குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க:தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் புகார்தாரர் வாதத்தை கேட்காதது ஏன்? மனித உரிமை ஆணையத்திடம் உயர் நீதிமன்றம் கேள்வி!