கரூரில் நடக்கும் மணல் கொள்ளையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி. பகலவனிடம் டிராபிக் ராமசாமி மனு அளிக்க வந்தார்.
இதன்பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "ஏற்கனவே மக்கள் பாதுகாப்பு கழகம் என்ற பெயரில் சமூக மக்கள் பிரச்னைகள் முன்னெடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுவருகிறது. இந்நிலையில் புதிதாக நல்லாட்சி இயக்கம் என்ற அமைப்பு கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நல்லாட்சி இயக்கத்தின் சார்பில் மக்கள் நலனில் அக்கறை உள்ள மனிதர்களைத் தேர்ந்தெடுத்து போட்டியிட வைப்போம். நாட்டு மக்கள் தேர்தலின்போது நான் உள்பட நல்லவராக இருந்தால் வாக்களியுங்கள், இல்லையென்றால் நோட்டாவிற்கு வாக்களியுங்கள். 33 விழுக்காடு வாக்குகள் நோட்டாவிற்கு பதிவானால் அந்தத் தேர்தல் ரத்து செய்யப்படும். இது சட்டத்தில் இடம் பெற்றுள்ளது" என்றார்.