அரவக்குறிச்சி அருகே உள்ள பூலாம்வலசு கிராமத்தில் நடைபெறும் சேவல் சண்டை நிகழ்ச்சி மிகவும் பிரபலமானதாகும். இங்கு சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக சேவல் சண்டை நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு சேவல்களை சண்டையிட செய்வார்கள், அதில் தோற்றுப்போகும் சேவலை வெற்றிபெற்ற சேவலின் உரிமையாளருக்கு கொடுத்து விடுவார்கள். மேலும் தோற்றுப்போன சேவலை கோச்சை என்று அழைக்கின்றனர்.
சண்டையில் ஈடுபடுத்தப்படும் சேவல்கள் இங்கு 3000 முதல் 15,000 வரை விலை போகிறது. சேவல்களில் செவலை, காகம், கீரி, நூலான், வல்லூறு, மயில், பேடு உட்பட பல வகைகள் உள்ளன.
சண்டை சேவல்கள் மீது தனிக்கவனம் செலுத்தி கம்பு, கேழ்வரகு, நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட சத்தான தானியங்களை உணவாகக் கொடுத்து வளர்கின்றனர். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி பூலாம்வலசு சேவல் சண்டை தொடங்கி வருகின்ற 18ஆம் தேதி வரை மொத்தம் நான்கு நாட்கள் நடைபெறுகின்றன. இதில் கலந்துகொள்ள தமிழ்நாட்டில் பல பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பலர் சேவலுடன் வருகிறார்கள். மொத்தம் நான்கு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் தினமும் ஆயிரக்கணக்கான சேவல்கள் சண்டையில் ஈடுபடுத்தப்படும். இந்த சேவல் சண்டையில் வெற்றிபெற்றால் அந்த வருடம் முழுவதும் தொழில் மேன்மை அடையும் என ஒரு சம்பிரதாயம் உள்ளதாக சேவல் சண்டையில் பங்கேற்பவர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து சண்முகம் என்பவர் கூறுகையில், சேவலை வளர்ப்பதற்கு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிறது. சேவல்கட்டு என்ற சேவல்சண்டை இல்லை என்றால் சேவல்கள் கறிக் கடைக்கு மட்டுமே பயன்படும். ஆனால் சேவல் சண்டையின் மூலம் லாபம் பெறுவதற்காக பலரும் சேவல் வளர்கின்றனர் என்றார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியிலிருந்து வந்த பிரகாஷ் என்பவர் கூறுகையில், பூலாம்வலசு கிராமத்தில் சேவல் சண்டை நடைபெறுவது தெரிந்து முதன்முதலாக கலந்துகொள்கிறேன். மேலும் எனது தாத்தா மற்றும் எனது அப்பா காலத்திலிருந்து சேவலை நாங்கள் வளர்த்து வருகின்றோம். அந்த வகையில் நானும் அதே கலாச்சாரம் மாறாமல் இருப்பதற்காக வளர்த்து வருகிறேன் என தெரிவித்தார்.
திருச்சியில் இருந்து வந்த சரவணன், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பூலாம்வலசு கிராமத்திற்கு சேவல் சண்டைக்காக வந்து கொண்டிருக்கிறேன். ஒரு சில ஆண்டுகள் சேவல் சண்டை நிறுத்தப்பட்டிருந்ததால் வர முடியவில்லை. தவிர மற்ற அனைத்து ஆண்டுகளிலும் வந்திருக்கிறேன். சேவலை வீட்டில் ஒருவராக நினைத்து வளர்க்கிறோம், குறிப்பாக இந்த பொங்கல் பண்டிகை முதல் நாள் என்பதால் சேவல் வெற்றிபெற்றால் அந்த ஆண்டு முழுவதும் நன்மை கிடைக்கும் என்ற ஒரு ஐதீகத்தில் சேவல் சண்டையில் கலந்துகொள்கிறோம் என்றார்.
தொடங்கியது பழமை வாய்ந்த பூலாம்வலசு சேவல் சண்டை மேலும் திருச்சியில் இருந்து வந்த சதீஷ் என்பவர் கூறுகையில், வெற்றிபெற்ற சேவலை வைத்து கோழிக்குஞ்சு எடுக்க பயன்படுத்திக்கொள்வோம். ஏனென்றால் அதன் வீரம் மாறாமல் இருக்கும். தோல்வியடைந்த சேவலை ஏலத்தில் விட்டு விடுவார்கள் இல்லை என்றால் அதனை சமைத்து உண்டு விடுவோம். தமிழ் கலாச்சாரம் அழியாமல் இருப்பதற்காக இளைஞர்கள் இதனை தொடர்ந்து செய்ய முன்வரவேண்டும் என்று கூறினார்.