கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையில் பல்வேறு துறைகளின் அமைச்சர்கள் கலந்துகொண்டு அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
அந்த வகையில், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இன்று செந்தில்நாதனுக்கு ஆதரவாக வேடமங்களம், வடுகப்பட்டி, குந்தாணி பாளையம், ஆசாரி பட்டறை, ஓலப்பாளையம் போன்ற பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வெல்லமண்டி நடராஜன் பரப்புரை அப்போது பேசிய அவர், “அரவக்குறிச்சி மக்களுக்கு இரட்டை இலை சின்னத்தை தவிர வேறு சின்னம் தெரியாது. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை பொறுப்பாளர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் ஆசீர்வதிக்கப்பட்ட வேட்பாளர் உங்கள் முன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க வந்துள்ளார். அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்” என்றார்.
பின்னர் பேசிய அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன், “எனக்கு வாய்ப்பு ஒன்று தாருங்கள். நான் நிச்சயம் உங்களுக்கு என்ன தேவை இருக்கிறதோ அதனை சரியாக செய்து தருவேன். அரவக்குறிச்சி மக்களிடையே இருக்கக்கூடிய முக்கிய பிரச்னையான குடிநீர் பிரச்னையைத் தீர்க்க வேலாயுதம்பாளையம் பகுதியில் ரூ.450 கோடி மதிப்பில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்கப்பட்டு ஒன்றரை டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கக் கூடிய கதவணை அமைக்கும் பணிகள் தேர்தல் முடிந்த உடன் தொடங்கப்படும். ஆறு மாதங்களில் இருந்து 9 மாதங்கள் வரை பணி நடைபெறும். அதன் பின்பு அரவக்குறிச்சியில் குடிநீர் பிரச்னை என்பதே இருக்காது” என்றார்.