கரூர்:அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தின் முப்பெரும் விழா கரூரில் நேற்று (ஜூலை 20) நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, கரூர் போக்குவரத்து மண்டல அலுவலகம் அமைந்துள்ள திருமாநிலையூர் பகுதியில் சங்க கொடி ஏற்று விழா மற்றும் சங்கத்தின் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
இதனையடுத்து ரூர் கடைவீதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற கொள்கை விளக்க கூட்டத்தின்போது, அரசு போக்குவரத்து ஓய்வூதிய நல மீட்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் கதிரேசன் ஈடிவி பாரத் செய்திக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில், "தமிழ்நாட்டில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு நவம்பர் 2015 முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் வழங்கியதை நிறைவேற்ற வேண்டும். ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் மருத்துவ காப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மூத்த குடிமக்களாக உள்ள போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு, மற்ற அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதைப்போல மாதம் தோறும் கடைசி நாளில் வழங்கும் நடைமுறையை கொண்டு வர வேண்டும். அரசு கருவூலம் மூலம் ஓய்வூதியத்தை வழங்கிட தமிழ்நாடு அரசே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 7வது கமிஷன் பணப் பலன்களை ஓய்வூதியத்தில் உயர்த்தி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் விலைவாசி உயர்வு, வயது முதிர்வு காரணமாக ஏற்படும் மருத்துவச் செலவுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 8 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ள அகைவிலைப்படி உயர்வினை விரைவாக உயர்த்தி வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் ஓய்வூதியர்கள் சார்பாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் உத்தரவு வழங்கியும் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து அரசு சார்பில் மேல்முறையீடு செய்தது திமுக அரசின் மீது ஓய்வூதியர்களுக்கு அதிருப்தியும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில் எதிர்வரும் ஜூலை 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதியரசர் கூறிய நிலையில், தீர்ப்பு வழங்கும் நாள் நீதிமன்ற நடைமுறைப்படி பட்டியலில் வரப்படாமல் இன்று வரை காலதாமதப்படுத்தி வருவது, தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமார் 90 ஆயிரம் ஓய்வூதியர்களை வஞ்சிக்கும் செயலாகும்.