கரூர்: வெங்கமேடு சின்னகுளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி கண்ணையன் (54). இவருக்கு கடந்த 2014ஆம் ஆண்டு சாம்சாங் கேலக்சி நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட்ட குலுக்கலில், ஆன்லைன் வழியே 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படுவதாக அலைபேசிக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதனை நம்பிய விவசாயி கண்ணையன் குறுஞ்செய்தியில் இடம் பெற்றிருந்த இ-மெயில் முகவரிக்கு, வங்கிக் கணக்கு விவரங்களை அனுப்பி வைத்துள்ளார். அப்போது பரிசுத் தொகையை பெறுவதற்கு முன்னர், வருமான வரித்துறைக்கு வரி செலுத்த வேண்டும் என மோசடி நபர்கள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் பணம் வந்தவுடன், இணைப்பு துண்டிப்பு
இதனையடுத்து மோசடி நபர்கள் கொடுத்த எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கிகளில் உள்ள சேமிப்பு கணக்குகளுக்கு ரூ. 9.20 லட்சத்தை, கண்ணையன் அனுப்பி வைத்துள்ளார். சில நாட்களில் பணத்தை பெற்றுக்கொண்ட மோசடி நபர்கள், கண்ணையனின் தொடர்பைத் துண்டித்துள்ளனர்.
சந்தேகமடைந்த கண்ணையன், இதுதொடர்பாக கரூர் மாவட்ட குற்றப் பிரிவில் புகார் அளித்தார். வழக்குப்பதியப்பட்டு 6 வருடங்களாகியும், வழக்கில் போதிய முன்னேற்றம் இல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில் வழக்கை விசாரணை செய்து, உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய மதுரை சென்னை உயர்நீதிமன்ற கிளை, சிபிசிஐடி காவல்துறையினருக்கு உத்தரவிட்டது.
பின்னர் சென்னை காவல் துறை சிபிசிஐடி இயக்குனர் உத்தரவின்பேரில், கரூர் சிபிசிஐடி காவல் ஆய்வாளர் திலகாதேவி தலைமையிலான தனிப்படை காவலர்கள், டெல்லி சென்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர். விசாரணையில் டெல்லி ரயில்வே ரோடு, ஆசாத்புர், பப்பு பால் கடை தெருவைச் சேர்ந்த முன்வர் நஜார் (26), சொகில் அன்சாரி (24), மகேஷ் (29) ஆகியோரே விவசாயியை ஏமாற்றியது தெரிய வந்தது.
சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளிகள்
இதனையடுத்து கடந்த ஜூலை 30ஆம் தேதி மூவரையும் கைது செய்த காவல் துறையினர், டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, குற்றவாளிகளை திருச்சி அழைத்துவந்தனர். இந்நிலையில் நேற்று (ஆக. 2) மாலை, குற்றவாளிகள் மூவரும் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, குளித்தலை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க:போதைப் பொருள் கடத்திய இருவர் கைது - ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்