இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரோனா பெருந்தொற்றின் காரணமாக தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவு தொடர்ந்து நடைமுறையில் உள்ளதால் திருமண நிகழ்ச்சி, இறப்பு, அவசர மருத்துவ காரணங்களுக்காக வாகன அனுமதி, பயண அனுமதி கோரும் பொதுமக்கள் https://tnepass.tnega.org என்ற இணையதளத்தின் வழியாக உரிய ஆவணங்களைப் பதிவேற்றம்செய்து விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடெங்கும் 144 தடை உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்னர் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களுக்கு மட்டும் பயண அனுமதி வழங்கப்படும். மேலும், மணமக்களின் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் திருமணத்திற்கான பயண அனுமதி வழங்கப்படும். திருமணத்திற்காக விண்ணப்பிக்கும் நபர்கள் கட்டாயமாகத் திருமண அழைப்பிதழை பதிவேற்றம்செய்ய வேண்டும்.
இறப்பு காரியங்களுக்கு பயண அனுமதி கோரும் விண்ணப்பதாரர்கள் இறப்பு நடைபெற்ற இடத்திலிருக்கும் மருத்துவரிடம் சான்று அல்லது அக்கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலரிடம் பெறப்பட்ட கிராம நிர்வாக அலுவலரின் சான்று அல்லது இறப்புச்சான்று இவற்றில் ஏதேனும் ஒன்றை கட்டாயமாக இணைய விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அவசர மருத்துவ காரணங்களுக்காக பயண அனுமதி கோரும் விண்ணப்பதாரர்களுக்கு உதவ ஒருவருக்கு மட்டுமே பயண அனுமதி வழங்கப்படும். விண்ணப்பதாரர் சமீபத்தில் நோயாளிக்கு வழங்கப்பட்ட மருத்துவச் சான்றினை இணையதள மனுவில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.