தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூரில் புதிதாக போடப்பட்ட சாலை கையோடு பிரிந்துவரும் அவலம்.. ரூ.25 லட்சம் எங்கே போனது? - மக்கள் சரமாரி கேள்வி! - குளித்தலை சட்டப் பேரவை உறுப்பினர் மாணிக்கம்

The sub standard tar road laid in Karur: கரூர் மாவட்டம் குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிதாகப் போடப்பட்ட தார்ச்சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

the sub standard tar road laid in Karur
கரூரில் ரூபாய் 25 லட்சம் மதிப்பில் போடப்பட்ட தரமற்ற தார்ச் சாலை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2023, 10:32 PM IST

Updated : Aug 27, 2023, 5:59 PM IST

கரூரில் ரூபாய் 25 லட்சம் மதிப்பில் போடப்பட்ட தரமற்ற தார்ச் சாலை

கரூர்: குளித்தலை அருகே கருப்பத்தூர் ஊராட்சி மேலதாளியாம்பட்டியில் வடக்குத் தெருவிலிருந்து சீகம்பட்டிக்குச் செல்வதற்கு அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் என அனைவரும் பல ஆண்டுகளாக மண் சாலையினை பயன்படுத்தி வந்துள்ளனர். குறிப்பாக, மழைக்காலங்களில் அந்த சாலை மிகவும் சேதம் அடைந்தும், தண்ணீர் வெளியேறுவதற்கு வழி இல்லாமல் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து வந்ததால், அப்பகுதி பொதுமக்கள் புதிய தார்ச் சாலை அமைக்க வேண்டுமென சுமார் 40 ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.

இந்த கோரிக்கையை ஏற்றுக் குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினர் திமுகவைச் சேர்ந்த மாணிக்கம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூபாய் 25 லட்சம் மதிப்பில் சுமார் 670 மீட்டர் தூரம் வரை புதிய தார்ச் சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கி பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்த நிலையில், புதிய தார்ச் சாலை அமைக்கும் பணியினை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் தார்ச் சாலை அமைக்கும் பணியினை காலம் தாழ்த்தி வந்ததோடு தரமற்ற தார்ச் சாலையினை அமைத்துள்ளார். இந்த புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டு, ஒருவார காலத்திற்குள் தார்ச் சாலை கையோடு பிரிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், இந்த சாலையில் இருசக்கர வாகனம் மற்றும் டிராக்டர் போன்ற வாகனங்கள் செல்லும்போது தார்ச் சாலை பெயர்ந்து பூமிக்குள் கீழே இறங்கி, பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர, தார்ச் சாலை முறையாகப் போடாமல் உள்ளதால், ஆங்காங்கே ஜல்லி கற்கள் பெயர்ந்து பள்ளங்களாகக் காட்சி அளித்து வருகிறது. மேலும் சுமார் 670 மீட்டர் தூரம் வரை அமைக்கப்பட வேண்டிய தார்ச் சாலை 420 மீட்டர் தூரம் வரை தான் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பான குற்றச்சாட்டு மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கவனத்திற்குச் சென்றதும் அவரே நேற்று (ஆகஸ்ட் 25) நேரில் சென்று தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட தார்ச் சாலையைப் பார்வையிட்டு, ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதிக்கவும் நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த தொகையை வழங்கக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே இன்று தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட தார்ச் சாலைகள் பெயர்த்து எடுக்கப்பட்டு மீண்டும் அந்த இடத்தில் தார்ச் சாலை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து குளித்தலை சட்டப் பேரவை உறுப்பினர் மாணிக்கத்தின் கைப்பேசிக்கு ஈடிவி பாரத் கரூர் செய்தியாளர் அழைத்த போது, அழைப்பை அவர் ஏற்கவில்லை. மேலும் இதுகுறித்து, எஸ்டிபிஐ கட்சியின் கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகமது அலி ஜின்னா ஈடிவி பாரத் தமிழ்நாட்டுக்கு அளித்த பேட்டியில், "திமுக அரசை மக்கள் அரியணையில் அமர்த்தி வைக்கும் பொழுது, நிறைய எதிர்பார்ப்புகளுடனும் ஏமாற்றத்தை நிவர்த்தி செய்யும் என்ற நம்பிக்கையுடனுமே ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தார்கள்.

அந்த பொறுப்புணர்வோடு தமிழக முதலமைச்சர், மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதி முறையாகச் செலவிடப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும். கரூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது இதுவரையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக, கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தார்ச் சாலைகள் மீண்டும் பராமரிக்கப்படாமல் உள்ளது.

மேலும், குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட தார்ச் சாலை தரமற்றது என்று கரூர் மாவட்ட ஆட்சியர் கண்டறிந்து அதனை அகற்ற உத்தரவிட்டிருப்பது மட்டும் போதாது, ஒப்பந்ததாரருக்கு யாருடைய நிர்ப்பந்தத்தின் பேரில் தார்ச் சாலை போடும் ஒப்பந்தப் பணி வழங்கப்பட்டது? அதற்கு எவ்வளவு கமிஷன் தொகை கொடுக்கப்பட்டது? என்பது குறித்து விசாரிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் அரசின் திட்டப் பணிகளில் பொறுப்புணர்ச்சியோடு நடந்து கொள்ள வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:Tenkasi news: ஏக்கர் கணக்கில் வெள்ளை பூசணி - சந்தையில் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பெரும் வேதனை!

Last Updated : Aug 27, 2023, 5:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details