கரூர்:அரசு மணல் குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகளை சரி செய்யக்கோரி, தமிழ்நாடு மணல் லாரி கூட்டமைப்பு தலைவர் எஸ்.யுவராஜ் தலைமையில் கரூரில் உள்ள, பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, தமிழ்நாடு மணல் லாரி கூட்டமைப்பு தலைவர் எஸ்.யுவராஜ் கூறுகையில், "கரூர் மாவட்டத்தில் மண்மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட வாங்கல் மல்லம்பாளையம், என்.புதூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மணல் குவாரிகளில், வெளி மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் மணல் கொண்டு செல்லும் லாரிகளுக்கு, இரண்டு நாட்களில் மணல் வழங்க வேண்டும். ஆனால், 8 நாட்கள் மணல் வழங்கப்படாமல் லாரிகள் காத்திருப்பதால், அதற்கான கூலியும் சேர்த்து மணல் விலை வெளிமார்க்கெட்டில் அதிகமாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு மணல் குவாரிகளில், ஆற்றிலிருந்து லாரிகளுக்கு மணலை வழங்கும் ஒப்பந்ததாரர், தனியாக லாரிகளுக்கு மணல் வழங்கி வருகிறார். இதனால், சட்டவிரோதமாக மணல் கடத்தல் அரசு மணல் குவாரிகளில் நடைபெறுகிறது. இந்த விதிமுறை மீறல்கள் குறித்து தட்டி கேட்ட தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர் சங்கங்கள் கூட்டமைப்பின், கரூர் மாவட்ட தலைவர் கருணாகரன் மற்றும் மாவட்ட பொருளாளர் சிவபதி ஆகியோர் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வாங்கல் காவல் நிலையத்தில் அதிகாரியை வேலை செய்ய விடாமல் தடுத்ததாக கூறி கடந்த மார்ச் 13-ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை திரும்பப் பெற வேண்டும். இது தவிர உள்ளூர் மணல் தேவைக்காக மாட்டு வண்டியில் மணல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாட்டு வண்டிகள், சில லாரிகளுக்கு வெளி மாநிலங்கள் கொண்டு செல்லும் வகையில் மணல் வழங்கி வருகின்றனர். இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர்.
கரூர் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில், கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் 15 தினங்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், சென்னையில் ஜூன் 6-ஆம் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்" எனத் தெரிவித்தார்.