கரூர்:தென்காசி சங்கரன்கோவில் அருகே கனப்பாகுளம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக சென்ற இரண்டு கார்களை நிறுத்தி, காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது, ஒரு கார் மட்டும் அங்கிருந்து நிற்காமல் சென்றுவிட்டது. பின்னர், ஒரு காரில் சோதனை செய்யும்போது புதிய 2ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக இருந்ததை காவல் துறையினர் கண்டறிந்தனர். மேலும், அவர்களிடம் விசாரணை செய்ததில், மொத்தம் கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது.
மேலும், இரட்டிப்பு பணம் தருவதாக நல்ல ரூபாய் நோட்டுக்களை பெற்றுக் கொண்டு கள்ள நோட்டுகளை பரிமாறிக் கொண்டதை கண்டறிந்தனர். இதுதொடர்பாக வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த பிரமணியன் (49), சந்தோஷ் (32), சிராஜ் கரீம் (44), வீரபத்திரன் (34), ஜெகதீஷ் (38 ), ஈரோட்டைச் சேர்ந்த (42), கிருஷ்ணவேணி(23) ஆகியோர் உள்ளிட்ட ஏழு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும், காரில் தப்பி, கள்ள நோட்டு கும்பல் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருப்பதாக சங்கரன்கோயில் டிஎஸ்பி சுதிர் தலைமையில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும், இது குறித்து திண்டுக்கல், கரூர், ஈரோடு, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் அளித்தனர்.
இந்த தகவல் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை நெடுஞ்சாலை ரோந்துப்பணி உதவி உடன், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகேவுள்ள தடா கோயில் பகுதியில் அரவக்குறிச்சி காவல் துறையினர், செயற்கையான வாகன நெரிசலை உருவாக்கி, சந்தேகத்துக்கிடமான காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது, காருக்குள் தமிழ்நாடு காவல் துறை சீருடையில் இருந்த நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வெப்படை என்.சி. காலனி பகுதியைச்சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் பூபதி (43), என்பவரை விசாரித்தபோது அவர் வைத்திருந்த காவல் துறை அடையாள அட்டை போலி என்பதை கண்டறிந்தனர். மேலும், அனைத்து தலைமைச் செயலக பத்திரிகையாளர் சங்கத்தின் உறுப்பினர் அடையாள அட்டையும் பூபதி வைத்திருந்தார்.
பின்னர் பூபதி உடன் காரில் வந்த நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, நாமக்கல் குமாரபாளையம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரின் மகன் சீனிவாசன் (22), நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகன் ஐயப்பன், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேலாத்தாள்கோயில் பகுதியைச் சேர்ந்த ராஜ் என்பவரின் மகன் செந்தில்குமார் (48), செந்தில்குமார் மனைவி முத்துமாரி (38), கார் ஓட்டுநர் ஞானசேகர் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து, தென்காசி மாவட்ட சங்கரன்கோவில் தாலுகா காவல் ஆய்வாளர் மாதவனிடம் ஒப்படைத்தனர்.
கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின்பேரில் இரவு ரோந்துப் பணியில் இருந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் தேவராஜன், அரவக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், காவலர்கள் சதீஷ் குமார், விஜயகுமார், ஜாஃபர் சாதிக், ஆயுதப்படை காவலர் தினேஷ்குமார் உள்ளிட்டோரை குற்றவாளிகளை லாபகமாக தடுத்து நிறுத்தி கைது செய்ததற்காக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பாராட்டு தெரிவித்தார்.
சினிமா பாதையில் காவல் துறை உடை அணிந்து சங்கரன்கோயில் காவல் துறையிடம் இருந்து தப்பித்து வந்த போது, அரவக்குறிச்சி அருகே போலி காவல் ஆய்வாளர் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:Crime: வாக்குவாதத்தில் மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவர்!