கரூர், தோகைமலை காவல் நிலையத்திற்குள்பட்ட போத்துராவுத்தன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி சிவசிங்கப்பெருமாள், சங்கீதா. சிவசிங்கப்பெருமாள் ஆடுகள் மேய்ச்சலோடு, விவசாயமும் செய்து வருகிறார். இவர்களுக்கு இராண்டு பெண் குழந்தைகள். பஞ்சப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் மார்ச் 10ஆம் தேதி மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த மூன்றாவது நாள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். மறுநாள், குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றதாகத் தெரிவிக்கின்றனர். சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலே, குழந்தை உயிரிழந்ததாக பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது.
மர்மமான முறையில் உயிரிழந்த குழந்தை குறித்து ஆய்வு பெண் சிசுவின் உயிரிழப்பு குறித்து கிராம நிர்வாக அலுவலர் அன்பு ராஜுக்கு தெரியவரவே தோகைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில், சிவசிங்கபெருமாள், சங்கீதா தம்பதியிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில், உயிரிழந்த குழந்தையை அவர்களின் சொந்தத் தோட்டத்திலே அடக்கம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, தோகைமலை காவல் ஆய்வாளர் முகமது இஸ்திரிஸ், கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் மகாமுனி முன்னிலையில், குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த ஆய்வையொட்டி, அரசு மருத்துவர்கள் மணிவாசகம், செங்கோட்டுவேல் குழந்தையின் முக்கிய உடல் உறுப்புகளை உடற்கூறாய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர். இந்த ஆய்வின் அறிக்கையை வைத்தே, குழந்தையின் உயிரிழப்பு இயற்கையானதா, கொலையா என்பது தெரிய வரும்.
இதையும் படிங்க: கருணாஸ் பேச்சால் சட்டப்பேரவையில் சலசலப்பு!