கரூர் தோட்டக்குறிச்சி பேரூராட்சி அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரும் அதிமுக பிரமுகருமான அன்புநாதன், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவை சேர்ந்த முக்கிய அமைச்சர்களுக்கு தேர்தல் செலவை ஏற்கும் பொறுப்பை அன்புநாதன் ஏற்றதால், அப்போதைய கரூர் மாவட்ட தேர்தல் செலவு கணக்கு பார்வையாளர் ஆசிக், வருமானவரித்துறை அதிகாரி மணிகண்டன் மற்றும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வசந்தா பாண்டே தலைமையில் இரண்டு நாட்களாக அதிரடி சோதனை நடத்தினர்.
அந்த சோதனைக்குப் பிறகு, தமிழ்நாடு முழுவதும் தொழிலதிபர் அன்புநாதன் பிரபலமானார். அதன் பின்னர் கோவையில் பிடிபட்ட கன்டெய்னர் லாரியில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தொடர்பாக அன்புநாதன் பெயரும் ஊடகங்களில் அடிபட்டது. நேரடி அரசியலில் இருந்து விலகி இருக்கும் அன்புநாதன், அதிமுகவில் உள்ள முக்கிய அமைச்சர்களுக்கு நெருக்கமானவர். அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு தேர்தல் செலவு அன்புநாதன் மூலமே மேற்கொள்ளப்பட்டது எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கு இன்னும் சில நாட்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ஈரோட்டில் அதிமுக வேட்பாளருக்கு தேர்தல் செலவு மற்றும் வாக்காளர்களுக்கு விநியோகிக்கும் பணம் ஆகியவை கரூர் அன்புநாதன் மூலம் விநியோகிக்கப்படலாம் என்ற நிலையில் கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் இன்று மாலை அன்புநாதன் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து குற்றப்பிரிவு போலீசாரிடம் கேட்டபொழுது, அதிமுக பிரமுகர் அன்புநாதன் 6 கோடி பண மோசடி புகாரில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். அதிமுக பிரமுகர், கரூரில் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் அதிமுக முக்கியப்புள்ளி அன்புநாதன் திடீர் கைது
கரூரில் 6 கோடி பண மோசடி புகாரில் அதிமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் அன்புநாதன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
The main functionary of the AIADMK anbunathan arrested in Karur