பட்டியலின மக்கள் பயன்படுத்தும் சுடுகாட்டுக்கு அடிப்படை வசதிகளை செய்துதர கோரிக்கை கரூர்: வல்லாக்குளத்துபாளையம் பகுதியில் வசிக்கும் அருந்ததியர் மக்களுக்கு சொந்தமான சுடுகாட்டில் அடிப்படை வசதிகள் ஊராட்சி நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை எனக் கூறப்படும் நிலையில், போதிய வசதிகள் இல்லாததால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாவதாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தலித் விடுதலை இயக்கத்தின் மாநில தலைவர் ச.கருப்பையா தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தலித் விடுதலை இயக்கத்தின் மாநில தலைவர் ச.கருப்பையா, "சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவுற்றும் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் தங்கள் அடிப்படை வசதிகளை கோரி போராடி வரும் சூழல் உள்ளது. அவர்கள் வாழ்வதற்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டிய அரசு, அவர்களின் மரணத்திலும் பாரபட்சம் காட்டி வருகிறது.
பட்டியல் இன மக்கள் சுடுகாடு நிலப் பிரச்சனை, சுடுகாட்டில் போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாமல் ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது. பட்டியலின மக்கள் மேம்பாட்டுக்காக அரசு ஒதுக்கப்பட்ட நிதியை திருப்பி அனுப்பும் சூழல் தொடர்ந்து வருகிறது.
எனவே, தமிழகம் முழுவதும் உள்ள பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிகளில் பயன்படுத்தும் சுடுகாட்டுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி கடந்த 25 ஆண்டுகளாக தலித்து விடுதலை இயக்கம் போராட்டம் நடத்தி வருகிறது. கரூர் மாவட்டம் புகலூர் வட்டத்திற்கு உட்பட்ட அத்திப்பாளையம் ஊராட்சி வல்லாகுளத்துப்பாளையத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, இறந்தவரின் உடலை புதைக்க சென்ற போது, அங்கு அடிப்படை வசதிகள் இல்லாமல் புதைக்கும் குழியில் நீரோட்டம் இருந்ததால், மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர்
எனவே கரூர் ஆட்சித் தலைவர் மாவட்டம் முழுவதும் உள்ள பட்டியலின மக்கள் பயன்படுத்தும் சுடுகாட்டுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் கரூர் மாவட்டத்தில் எந்தெந்த ஊராட்சிகளில் பட்டியலின மக்களுக்கு சுடுகாடு இல்லை என்பதையும் சுடுகாடு இருந்தும் அடிப்படை வசதிகள் இல்லாத இடங்கள் குறித்தும் ஆய்வு நடத்தி அறிக்கையை மனுவில் இணைத்துள்ளோம்.
சமூக நீதி காவலர் என்று பெருமை பேசும் திமுக அரசு மெத்தனம் காட்டினால் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க :கிருஷ்ணகிரி வெடி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி: அமைச்சர் சக்கரபாணி ஆய்வு!