தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஜாகீர் உசேன் மீதான புகார் முழுக்க உண்மை' - இசைப் பள்ளி ஆசிரியை பேட்டி - The complaint against Zakir Hussain is completely true

அரசுப் பணியில் உள்ள பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முதலமைச்சர் நீதி வழங்க வேண்டும் என ஜாகீர் உசேன் மீது பாலியல் புகார் தெரிவித்த இசைப் பள்ளி ஆசிரியை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இசை பள்ளி ஆசிரியை பேட்டி
இசை பள்ளி ஆசிரியை பேட்டி

By

Published : Jun 9, 2022, 11:00 PM IST

கரூர்:இசைப் பள்ளி ஆசிரியை பிரபல நடன கலைஞரும் கலை பண்பாட்டுத்துறை கலையியல் அறிவுரைஞர் ஜாகீர் உசேன் மீதான பாலியல் புகார் அடிப்படையில் விசாகா கமிட்டி விசாரணை சென்னையிலுள்ள இயக்குநரகத்தில் ஏப்.8, ஏப்.28 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்நிலையில் இன்று ஊடகங்களில் விசாரணை கமிட்டி விசாரணையில் ஜாகீர் உசேன் மீது அளிக்கப்பட்ட புகார் பொய்யானது என செய்திகள் வெளியாகியன. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் கரூரில் இன்று இசைப் பள்ளி ஆசிரியை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்பொழுது அவர் கூறுகையில், "இருமுறை நடைபெற்ற விசாகா கமிட்டி விசாரணையில் நேரில் ஆஜராகி புகார் குறித்து முழு விளக்கங்களை அளித்து இருந்தேன். தனக்கு நியாயம் கிடைக்கும் தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்று நம்பி இருந்த நேரத்தில், இன்று சில தொலைக்காட்சிகளில் விசாகா கமிட்டி அறிக்கையில் ஜாகீர் உசேன் நிரபராதி, அவர் மீதான புகார் பொய் என கூறப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. இது சம்பந்தமாக புகார்தாரரான தனக்கு எந்த விதமான கடிதமும் கிடைக்கப் பெறவில்லை. எனவே தான் பொய்யான புகார் அளித்து இருப்பதாக கூறுவதை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். ஆய்வு நடைபெற்றபோது தனி அறையில் தன்னிடம் ஜாகீர் உசேன் தவறாக நடந்து கொண்டார் என்பதற்கு நானே வலுவான சாட்சி. அறைக்கு வெளியே நின்று கொண்டு இருந்த தலைமை ஆசிரியை உடன் பணியாற்றும் இசைப் பள்ளி ஆசிரியர்கள் அங்கு பயிலும் மாணவர்கள் இதற்கு சாட்சி. சம்பந்தப்பட்ட இசைப் பள்ளியில் சம்பவம் நடைபெற்ற அன்று எவ்வித சிசிடிவி கேமராக்களும் மற்ற வீடியோ ஒளிப்பதிவும் இல்லை. இப்படியிருக்கையில் ஜாகீர் உசேன் நிரபராதி என்று எதை ஆதராமாக வைத்து கூறினார்கள் என்று தெரியவில்லை. உண்மைக்குப் புறம்பான தகவல்களை நான் புகாரில் தெரிவிக்கவில்லை, எனது புகாரிலிருந்து ஜாகீர் உசேனை காப்பாற்ற முயற்சி நடக்கிறது.

இந்த சம்பவம் எனக்கு மட்டும் நடைபெற்ற சம்பவமாக நான் கருதாமல் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஒட்டுமொத்த பெண்களுக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்பதற்காக தனது குடும்பத்தினரின் உதவியுடன் இதை பொதுவெளியில் பகிரங்கமாக குறிப்பிடுகின்றேன்.

இசை பள்ளி ஆசிரியை பேட்டி

முதலமைச்சருக்கு வேண்டுகோள்:

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எங்கு அநீதி நடந்தாலும் அதனை தகப்பன் ஸ்தானத்தில் இருந்து தட்டிக் கேட்பேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார். ஒரு சகோதரனாக நினைத்து முதலமைச்சருக்கு வேண்டுகோள் வைக்கிறேன். காவல்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதுபோல அரசு பணியில் உள்ள பெண்களுக்கு எதிராக நடைபெறும் அநீதிகளுக்கு தனிக்கவனம் முதலமைச்சர் செலுத்த வேண்டும். தனக்கு உரிய நீதி வழங்க வேண்டும். இன்னும் தனக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.

புகார் அளித்த தனக்கு துறை ரீதியாக இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படாத நிலையில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு பதிலளிப்பவர் அளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருப்பதிலிருந்து இந்த சம்பவத்தில் என்ன நடந்திருக்கும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அரசு ஊழியர் ஐக்கிய பேரவை சங்கத்தில் உறுப்பினராக உள்ளதால் எழுத்துபூர்வமாக சங்கத் தலைவருக்கு புகார் அனுப்பி இருந்தேன். அந்த அடிப்படையில் பள்ளி தலைமை ஆசிரியரிடம் நடந்ததை கேட்டபொழுது இசைப் பள்ளி தலைமை ஆசிரியை சங்க நிர்வாகியிடம் நடந்த சம்பவம் குறித்து விளக்கிய குரல் ஒலிப்பதிவு தன்னிடம் உள்ளது. அடுத்தக்கட்ட நடவடிக்கையாக சட்டரீதியாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:44ஆவது செஸ் ஒலிம்பியாட்' முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை!

ABOUT THE AUTHOR

...view details