கரூர்: முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமார், அரசு, அரசு உதவிபெறும், தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நேற்று (பிப் 01) கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.
அதில், "கரூர் மாவட்டத்திலுள்ள வள்ளுவர் மேலாண்மை கல்லூரி நிர்வாகம், பள்ளி மாணவர்களுக்குத் தங்கள் செலவில் சேமிப்புக்கணக்குத் தொடங்கி, சேமிப்பை ஊக்குவிக்க நாட்டுக்கோழி வளர்ப்பு போன்ற சுயதொழிலைத் தொடங்கி, மாணவர்களுக்கு வளமான எதிர்காலத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கவும் கோரியுள்ளது.
எனவே, கரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், பள்ளிக்கோ, மாணவர்களுக்கோ செலவு ஏற்படுத்தாத வகையில், பள்ளி மாணவர்கள் நலன், ஆசிரியர்கள் நலன் பாதிக்காத வகையில், இந்நிகழ்வில் எவ்விதப் புகாருக்கும் இடமின்றியும், இதுசார்ந்து ஏதேனும் புகார்கள் பெறப்பட்டால் இவ்வாணை உடனே ரத்து செய்யப்படும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டத்தை செயல்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது” எனத் தெரிவித்திருந்தார்.
கண்டனம் எழுப்பிய ஆசிரியர்கள் சங்கம்
இத்திட்டத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கரூர் மாவட்டச் செயலாளர் மலைக்கொழுந்தன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும், சமூகத்தின் பார்வையில் ஆச்சரியத்தையும், சமூக ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தையும் தரக்கூடியதாக இருக்கிறது.
ஏற்கெனவே மாணவர்கள் புறா வளர்ப்பது, கோழி வளர்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுக் கொண்டு கல்வி செயல்பாடுகளில் நாட்டம் குறைந்துள்ள சூழலில், ஏதோ ஒரு தனியார் கல்லூரியின் பெயரிலும், அவர்கள் உதவியின் பெயரிலும் அரசுப் பள்ளிகளில் கோழி வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்த சொல்வது மிகுந்த கண்டனத்திற்குரியது, வேதனைக்குரியது.
கரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், இத்திட்டத்தை பரிசீலனை செய்து, செயல்முறைகளை ரத்து செய்ய வேண்டும். மாணவர்களுக்குப்பணம் வருகிறது என்பதற்காக பன்றி வளர்க்க சொல்லி, நாளை யாரும் வந்து நின்று விடக்கூடாது. குலத்தொழிலை இதன் வழியாக திணித்து, குலத்துக்கு ஒரு நீதி எனும் மனுநீதியை நிலை நாட்டும் முயற்சியின் தொடக்கமாக இருக்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது.