மாதிரி பாடத்திட்டத்தினை திரும்பப் பெறக்கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் கரூர்:திராவிட முன்னேற்றக் கழக அரசு பொறுப்பேற்றவுடன் தமிழகத்தில் உயர் கல்வியின் தரம் உயர்த்தப்படுவதாகக் கூறி முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக உயர் கல்வித்துறையில் உள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் உறுப்பினர்கள் மாற்றி அமைக்கப்பட்டனர்.
தமிழகத்தில் பாரதியார், பாரதிதாசன், அண்ணா, மனோன்மணியம் சுந்தரனார், உள்ளிட்ட 13 பல்கலைக்கழகங்களும் அவற்றின் கீழ் இணைப்பில் 164 கலை அறிவியல் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. கலை அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் ஒவ்வொரு வகையான பாடத்திட்டங்கள் தற்பொழுது நடைமுறையில் இருந்து வருகிறது.
தற்போது, தமிழக அரசும் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றமும் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தில் அனைத்து மாணவர்களும் பட்டப்படிப்பை படிக்கும் வகையில் வெளியிட்டுள்ள பொது பாடத்திட்டத்தினை தயார் செய்து வெளியிட்டுள்ளது.
இதற்கு ஒருபுறம் ஆதரவு இருந்தபோதும் மற்றொருபுறம், தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் பொது பாடத்திட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கோரிக்கை அட்டையை அணிந்து ஜூன் 17ஆம் தேதி பணியாற்றினர். மேலும், வாயில் முழக்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் தலைவராக உள்ள உயர் கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் பொன்முடி, அமலாக்கத்துறை சோதனையில் சிக்கி உள்ள நிலையில், ஜேஏசி கூட்டுக் குழுவினர் போராட்டத்தை துவக்கியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இது குறித்து தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் கரூர் கிளை செயலாளர் பேராசிரியர் முனைவர் பார்த்திபன் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், ''ஜேஏசி கூட்டுக் குழு முடிவின்படி பொது பாடத்திட்டம் எனும் மாதிரி பாடத்திட்டத்தினை தமிழக அரசு கைவிட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலைக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றும் பேராசிரியர்கள் ஒரு நாள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றும் போராட்டத்தைத் துவங்கியுள்ளோம்.
இதையும் படிங்க:Minister Ponmudi: 100க்கும் மேற்பட்ட கேள்விகள்.. அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை 2-ம் நாள் விசாரணை!
ஏற்கனவே நடைமுறையில் உள்ள பாடத்திட்டங்கள் மாணவர்களுக்கு நல்ல கற்கும் திறனை தருகின்றன. கூடுதலாக புதிய பாடத்திட்டத்தினை கொண்டுவரும்போது, வழக்கமாக பேராசிரியர்கள் கலந்து ஆலோசித்து பாடத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவரப்படும். ஆனால், தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் இந்த முறை தன்னிச்சையாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் மாதிரி பாடத்திட்டத்தை தமிழக அரசு மூலம் அமல்படுத்த முயற்சி மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது.
இதனை திரும்பப் பெற வேண்டும், தரமற்ற முறையில் பொது பாடத்திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழகம் மற்றும் அரசு கலைக் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் போதிக்கும் திறனுக்கு எதிரானதாக உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்திடம் ஜேஏசி கூட்டுக் குழுவினர் சந்தித்து மாணவர்களுக்கு எதிராகவும் பேராசிரியர் நலனுக்கு எதிராகவும் உள்ள பொது பாடத்திட்டம் என்னும் மாதிரி பாடத்திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால், கோரிக்கையை பரிசீலிப்பதாகக் கூறிவிட்டு உயர்கல்வி செயலாளர் பொது மாதிரி பாடத்திட்டத்தை அறிவித்து இருக்கிறார். இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக வாயில் முழக்க போராட்டம் நடத்தி வருகிறோம். அடுத்த கட்டமாக கையெழுத்து இயக்கத்தை துவங்கி நடத்த இருக்கிறோம்.
மூன்றாவது கட்டமாக பல்கலைக்கழகங்கள் முன்பு பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவித்தார். இது தவிர மாநில உயர்கல்வி மன்றம் பேராசிரியர்களுக்கு வழங்கிய பயணப்படியை திரும்ப வழங்கும் போராட்டமும் மேற்கொள்ள உள்ளோம். தொடர்ந்து மாணவர்களுக்கு எதிராகவும் உள்ள பொது மாதிரி கல்விப் பாடத்தை எதிர்ப்போம்” எனத் தெரிவித்தார்
தமிழக உயர் கல்வித்துறை அமைச்சரும் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் தலைவருமான பொன்முடி தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் 75 சதவீத பாடத்திட்டம் ஒரே மாதிரியாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்வதாக கூறியிருந்தார். இந்நிலையில் தான் தமிழக அரசுக்கு எதிராகப் பேராசிரியர்களின் போராட்டத்தை துவங்கி உள்ளனர்.
இதுகுறித்து கல்வியாளர்களிடம் கருத்துக் கேட்டபோது, ''ஒரே பாடத்தை கலை அறிவியல் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் படிக்கும் மாணவர்களுக்கு அரசு கொண்டுவர முன் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தினால் சொற்ப எண்ணிக்கையில் பணியாற்றி வரும் சில துறை சார்ந்த பேராசிரியர்கள் பணியிழக்கும் அபாயம் உள்ளது.
எனவே தான், கல்லூரி பேராசிரியர்கள் பழைய நடைமுறைப்படி உள்ள பாடத்திட்டங்களைத் தொடர வேண்டும் என தங்களது எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் போராட்டத்தில் இறங்கி உள்ளோம்'' எனக் கூறுகின்றனர்.
மாநில அளவிலான உயர்கல்வி திட்டங்கள், பல்கலைக்கழக மானிய குழுவின் கல்வி திட்டங்களை ஒருங்கிணைக்க அமைக்கப்பட்ட தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் உள்ள பாடத்திட்டங்களை ஆய்வு செய்து, இணை கல்வி குழுவிற்கு அறிக்கை சமர்ப்பித்தது. அதன் தீர்மானங்களை அரசுக்கு வலியுறுத்தும் பணியினை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க:Tambaram: பள்ளி வேன் மோதி ஆசிரியை உயிரிழப்பு; பள்ளங்கள் மூடப்படாததும் காரணமா?