ஆதிதிராவிட நல அலுவலரைக் கண்டித்து ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம் கரூர்:கரூர் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் சண்முகவடிவேல், சாதிய பாகுபாடோடு ஆசிரியர்களுக்கு குறிப்பாணைகள் வழங்கி வருவது குறித்தும், காலாண்டுத் தேர்வு மதிப்பெண்களைக் குறைத்து மதிப்பிட்டு ஆசிரியர்களை பழிவாங்கும் நோக்கோடு குறிப்பாணை வழங்கப்படுவதாகவும், எனவே அதனைக் கண்டித்து தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் முன்னேற்றச் சங்கம் மற்றும் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டவர்கள் (நவ.29), நேற்று மாலை 5 மணியளவில் பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு கரூர் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சண்முகவடிவேல் திடீரென அலுவலகத்தை விட்டு வெளியே சென்று விட்டதால், ஆதிதிராவிட நல கண்காணிப்பாளர் பெரிய நாச்சியைச் சந்தித்து முறையிட்டனர். பின்னர், இது குறித்து தகவல் அறிந்த கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து கோரிக்கை மனுவினை பெற்றுக் கொண்டார்.
மேலும், இது குறித்து கரூர் மாவட்ட ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் கரூர் மாவட்டச் செயலாளருமான ஆ.மலைக்கொழுந்தன் அளித்த பேட்டியில், “கரூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல அலுவலராக உள்ள சண்முகவடிவேல், கரூர் டாஸ்மாக் மண்டல மேலாளராக சிறப்பாக செயல்படாத காரணத்தினால் வேறு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டு, தற்போது கரூர் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கரூர் மாவட்டத்தில் கல்வி வளர்ச்சிக்காக சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களை, குறிப்பாணை வழங்கி ஒருமையில் பேசி ஆசிரியர் சமூகத்தை இழிவுபடுத்தி வருகிறார். இதனைக் கண்டித்து இன்று ஆசிரியர் சங்கங்கள் சார்பில் முறையிடுவதற்காக வந்தபோது, அலுவலகத்தில் அவர் இல்லை என பணியில் இருந்த அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும், கரூர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து பழி வாங்கும் நடவடிக்கையில் வழங்கப்படும் குறிப்பாணைகளை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இந்த மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர், ஆசிரியர் சமூகத்துக்கு எதிராக செயல்பட்டால் மிகப்பெரிய போராட்டத்தை கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடத்துவோம்” என தெரிவித்தார். இதனையடுத்து, தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் முன்னேற்ற சங்க மாநில பொதுச் செயலாளர் கூறுகையில், “கரூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல அலுவலர் ஆய்வுக்குச் செல்லும் பொழுது ஆசிரியர்களை தரக்குறைவாக பேசுகிறார்.
ஆய்வுக்குச் செல்லாமலே, காலாண்டுத் தேர்வு முடிவுகளை கூகுள் சீட்ஸ் (Google Sheets) அடிப்படையில் வைத்து, ஆசிரியர்களுக்கு குறிப்பாணைகளை அனுப்பி அலுவலகத்துக்கு தனியாக வரும்படி அழைக்கிறார். இது குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால், போராட்டம் தற்காலிகமாக விளக்கிக் கொள்ளப்பட்டது. மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சண்முகவடிவேலின் இம்மாதிரியான நடவடிக்கை மேலும் தொடருமானால், அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:“ஒற்றைச் சான்றிதழ் இல்லாததால் இரண்டு தலைமுறைகள் அழிந்து விட்டது” - கொங்குநாடு வேட்டுவர் கவுண்டர் முன்னேற்ற சங்கத்தினர் குற்றச்சாட்டு!