பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாவிடில் போராடுவோம் என போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் தகவல் கரூர்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிலாளர் சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கரூர் பேருந்து நிலையம் பகுதியில் ஜன. 2ஆம் தேதி (நாளை) மாலை 4 மணியளவில் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில், பொதுமக்களுக்கு துண்டறிக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களின் சம்மேளனம் மற்றும் ஓய்வு போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளனத்தின் மாநில தலைவர் ஷாஜகான், கரூர் கிளை சிஐடியூ பொறுப்பாளர் குணசேகரன், ஓய்வு பெற்றோர் சங்கத்தில் நிர்வாகி குப்புசாமி, பழனிச்சாமி உள்ளிட்ட கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் போது, தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களின் சம்மேளனம் மற்றும் ஓய்வு போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளனத்தின் மாநில தலைவர் ஷாஜகான் ஈடிவி பாரத்திற்கு நேற்று (ஜன.3) அளித்த பேட்டியில், 'ஜனவரி 3ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல அலுவலகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறது.
அப்போது, பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஜன.4ஆம் தேதி வியாழக்கிழமை தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு நடைபெற உள்ள வாயில் கூட்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை துவக்க உள்ளது.
தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு தேவை: இது தொடர்பாக, கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை விளக்கி, துண்டறிக்கைகளாக வழங்கி பொதுமக்களிடம் ஆதரவு திரட்டப்பட்டது' என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், 'போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு 31.8.2023ஆம் தேதியோடு ஊதிய ஒப்பந்த காலம் நிறைவடைவதால், இதுவரை அரசு ஊதிய ஒப்பந்த காலத்தை நீட்டிப்பது தொடர்பாக உடனடியாக பேச்சுவார்த்தை துவங்கவில்லை.
போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் நிதி பற்றாக்குறையை சரிசெய்ய, தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும் உடனடியாக தமிழ்நாடு அரசு, போக்குவரத்து தொழிலாளர்களின் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை தவிர்க்கும் வகையில், அனைத்து கூட்டமைப்பு சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி, கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும்' என கோரிக்கை விடுத்தார்.
போக்குவரத்து சேவை பாதிக்க வாய்ப்பு: போக்குவரத்து தொழிலாளர்கள் மத்தியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தல் நேரத்தில் திமுக ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் வாக்குறுதி நிறைவேற்றப்படும் என அளித்த தேர்தல் வாக்குறுதி அடங்கிய வீடியோ ஒன்று தற்போது, வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
இன்று ஜன.3ஆம் தேதி நடைபெறும் முதல்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனில், திட்டமிட்டப்படி நாளை ஜன.4ஆம் தேதி முதல் போக்குவரத்து அனைத்து தொழிலாளர் சங்க கூட்டமைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ள நிலையில், அரசு போக்குவரத்து சேவை பாதிக்கும் சூழல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரூரில் ஐடி அதிகாரிகளை தாக்கிய வழக்கு; 4 பேரின் ஜாமீன் ரத்து!