தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் அதிகபட்ச மின் நுகர்வு.. வரலாற்றில் புதிய உச்சம்...

தமிழ்நாடு மின்சார வாரிய வரலாற்றிலேயே நேற்று (ஏப். 29) அதிகபட்ச மின் நுகர்வு 388.10 மில்லியன் யூனிட், அதாவது 17,563 மெகாவாட் ஆக பதிவாகியுள்ளது. இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடுசெய்யப்பட்டது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

By

Published : Apr 30, 2022, 5:12 PM IST

கரூர் மாவட்டத்தில் உள்ள பழைய அரசு மருத்துவக் கல்லூரி வாளகத்தை மீண்டும் அரசு தலைமை மருத்துவமனையாக மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதனை இன்று (ஏப்ரல் 30) மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து சிஎஸ்ஐ பள்ளியில் நடைபெற்று வரும் மெகா கரோனா தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்து அமைச்சர் செந்தில் பாலாஜி பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் செய்தியாளர்களை சந்தித்து மாநிலத்தில் மின்வெட்டு குறித்து உண்மைக்கு புறம்பான தவறான தகவல்களை அளித்து வருவது குறித்து ஏற்கனவே செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கையில், மீண்டும் உண்மைக்கு புறம்பான தகவல்களை அவர் தெரிவிக்கும்போது செய்தியாளர்கள், எனது விளக்கத்தை கொண்டு கேள்வி எழுப்ப வேண்டும்.

அமைச்சர் பேட்டி

பாஜக ஆளும் மாநிலங்களில் மின்வெட்டு

பாஜக ஆளும் மாநிலங்களில் எந்தெந்த மாநிலங்களில் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்தும் செய்தியாளர்கள் கேட்டறிய வேண்டும். குஜராத் மாநிலத்தில் தொழிற்சாலைகளுக்கு மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.

நிலக்கரி பற்றாக்குறை இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் ஏற்பட்டுள்ளபோது தமிழ்நாட்டில் மட்டும் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் உண்மைக்கு புறம்பான தவறான தகவல்களை தெரிவித்து வருகிறார்.

அமைச்சர் தகவல்

நிலக்கரி பற்றாக்குறையிலும் சீரான மின் விநியோகம்

தமிழ்நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை உள்ளது. பற்றாக்குறையை ஈடுசெய்ய ஒன்றிய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பற்றாக்குறை இருந்தபோதும் சீரான மின் வினியோகம் தமிழ்நாட்டில் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் மின் தடை குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

முதலமைச்சர் காலை, மதியம், மாலை, இரவு என நான்கு வேளை தமிழ்நாட்டில் மின்வெட்டு குறித்து மேற்பார்வையிட்டு வருகிறார். தனியார் தொலைக்காட்சி கடந்த இரு நாட்களுக்கு முன்பு 15 நிமிட நேரலை பேட்டி ஒளிபரப்பு செய்தார்கள். அதில்கூட முழுமையாக தமிழ்நாட்டின் நிலை குறித்து கேள்வி எழுப்பவில்லை. கடந்த ஐந்து நாட்களாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 15 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆனால் உற்பத்தியே நடைபெறவில்லை எனக் கூறுகின்றனர்.

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட அமைச்சர்

கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சனிக்கிழமைக்குப் பிறகு தமிழ்நாட்டில் எங்காவது மின்வெட்டு இருந்தது என்றால் கேள்வி எழுப்பலாம். சில பத்திரிகைகளில் கூட திடீர் பழுதின் காரணமாகவும், பராமரிப்பு காரணமாகவும் ஏற்படக்கூடிய மின் தடைகளை மின்வெட்டு என்று செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

சமூக வலைதளத்தில் தவறான தகவல் பகிரப்பட்டால் கூட அதனை செய்தியாக வெளியிட்டு வருகின்றனர். அதனையும் அரசு கண்காணித்து வருகிறது. தமிழ்நாட்டில் இதன் மூலம் மக்கள் மத்தியில் பதட்டத்தை உருவாக்க முயற்சிக்க வேண்டாம்.

மின் தேவையை பூர்த்தி செய்ய புதிய மின் உற்பத்தி திட்டங்கள்

நிலக்கரி பற்றாக்குறை காரணமாக இந்தியாவில் பல மாநிலங்களில் மின்தடை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டில் மின் தேவையை சமாளித்துக் கொள்வதற்கு புதிய மின் உற்பத்தி திட்டங்கள் மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக மின் நுகர்வு, அதிகப் பற்றாக்குறை

நேற்று(ஏப்ரல் 29) தமிழ்நாடு வரலாற்றில் மின்சார வாரியத்தில் அதிகபட்ச மின் நுகர்வு 388.10 மில்லியன் யூனிட் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது மெகாவாட் அளவில் 17,563 ஆக பதிவாகியுள்ளது. இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடுசெய்யப்பட்டது. இதற்கு முந்தைய உட்சபட்ச நுகர்வு ஏப்ரல் 28ஆம் தேதி, 387.047 மில்லியன் யூனிட் ஆகவும் மெகாவாட் அளவில் 17,370 ஆகவும் பதிவாகியிருந்தது.

ஒன்றிய அரசு நிலக்கரி பற்றாக்குறையை சரி செய்வதற்கு நிலக்கரி வழங்கவில்லை. முதலில் நிலக்கரி கையிருப்பு இல்லை என்றார்கள் தற்போது நிலக்கரி கொண்டு வரும் ரயில் பெட்டிகள் போதுமானதாக இல்லை எனக் கூறுகின்றனர்.

ஒளிவுமறைவின்றி டெண்டர் முறை

மின் வாரியத்தில் டெண்டர் முறைகேடு என தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட ஒப்பந்த நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது என சமூக வலைதளத்தில் தவறான தகவலை பரப்பி வருகின்றனர். பொதுவாக அரசின் நடவடிக்கை குறித்து பாராட்ட மனம் இல்லை என்றாலும் தேவையில்லாத பதட்டத்தை உண்டாக்க முயற்சிக்க வேண்டாம்.

டெண்டர் முறையில் பங்கேற்கும் நிறுவனங்கள் குறைந்த அளவு விலையை, அவர்களே நிர்ணயித்து பங்கேற்பதால் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பில்லை. எந்தவிதமான ஒளிவு மறைவும் இன்றி வெளிப்படையாக நடைபெற்ற டெண்டர் முறையாகும்" என்றார்.

இதையும் படிங்க: திமுக என்றாலே மின்வெட்டு..! - முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி

ABOUT THE AUTHOR

...view details