கரூர்:கரூர் மாவட்டம், புகலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தென்னிலை மேற்கு கிராமம், பரமேஸ்வரி நிறுவனத்தினரின் சாதாரண கல்குவாரி மற்றும் தென்னிலை கிழக்கு கிராமம், சாந்திமதி நிறுவனத்தினரின் சாதாரண கல்குவாரி கருத்து கேட்பு கூட்டம், நேற்று (டிச.19) தென்னிலை கொடுமுடி லட்சுமி மண்டபத்தில், கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன், கரூர் மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் ஜெயலட்சுமி, சாமானிய மக்கள் நலக் கட்சி செயலாளர் சண்முகம், விஜயன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் தென்னிலை ராஜா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு, கல்குவாரி பாதிப்புகள் குறித்து எதிர்ப்பு கருத்துக்களை பதிவு செய்தனர்.
பின்னர், ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன் அளித்த பேட்டியில், “தமிழ்நாடு முழுவதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் சட்டவிரோதமாக மணல் குவாரிகளில் கிட்டத்தட்ட ரூ.50 ஆயிரம் கோடி மணல் கொள்ளை நடந்துள்ளது. இவ்வாறு சட்ட விரோதமாக நடக்கும் மணல் கொள்ளைகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர், பொதுப்பணித்துறை, கனிமவளத்துறை அமைச்சர் ஆகியோர் உடந்தையாக உள்ளனர்.
நல்லம்பாளையம் மற்றும் நன்னியூர் பகுதிகளில் மணல் குவாரி செயல்பட அரசு அனுமதி அளித்த 8 மாத காலத்தில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி அளவிற்கு, 2 லட்சத்து 17 ஆயிரம் லாரி லோடுகளில் மணல் கொள்ளை நடந்துள்ளது. இதற்கு காரணம் முன்னாள் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர். எனவே, அவரின் சொத்துக்களை தமிழக அரசு பறிமுதல் செய்ய வேண்டும். இதனை அமலாக்கத்துறை திடீர் ஆய்வு நடத்தி வழக்குப் பதிவு செய்துள்ளது.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க அனுப்பப்பட்ட அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இது சம்பந்தமான வழக்கு நேற்று (டிச.19) விசாரணைக்கு வந்துள்ளது. வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சமூக சொத்துகளை பாதுகாக்க தவறியுள்ளனர் என்பதை உணர்ந்து தமிழக அரசு செயல்பட வேண்டும்.
மணல் கொள்ளையில் உடந்தையாக இருந்த அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்தால், ரூ.4 ஆயிரத்து 800 கோடி அரசுக்கு அபராதத் தொகை வருமானமாக கிடைக்கும். தமிழ்நாடு முழுக்க ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட சமூக சொத்தை அரசு மீட்டெடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.