தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மண்டல அளவிலான ஆயத்த மாநாடு கரூர் நாரதகான கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாநாட்டிற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், திண்டுக்கல் மாவட்ட தலைவர் விஜயகுமார், மதுரை மாவட்ட தலைவர் மூர்த்தி, தேனி மாவட்ட தலைவர் வரதராஜ், திருச்சி மாவட்ட தலைவர் விவேகானந்தன் ஆகியோர் தலைமை தாங்கினார்.
மண்டல மாநாட்டுக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் மங்களபாண்டியன், மாநில துணைத் தலைவர் பெரியசாமி கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் மங்களபாண்டியன், "ஜாக்டோஜியோ போராட்டத்தில் பங்கேற்றதற்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 5,068 பேருக்கு வழங்கப்பட்ட 17பி குற்றவியல் குறிப்பாணைகளை ரத்து செய்யவேண்டும். தமிழ்நாட்டில் அரசு துறையில் உள்ள 4.5 லட்சம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும். சிறப்பு ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, ஊர்ப்புற நூலகர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட 3.5 லட்சம் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்.