கரூர்: கடவூர் தாலுகாவிற்கு உட்பட்ட முள்ளிப்பாடி ஊராட்சியில் உள்ள முள்ளிப்பாடி, வீரகவுண்டம்பட்டி, தளிவாசல், சேர்வைக்காரன் பட்டி, திருமலைராயபுரம், மாலப்பட்டி ,மொடக்கூர், தொப்பூர் உள்ளிட்ட 17 மலைகிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் சுற்றித் திரியும் வெறிநாய்கள், கால்நடைகளை வேட்டையாடும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
இரண்டு லட்சம் நஷ்டம்: இதன் காரணமாக அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலர்கள், போலீசார், வருவாய்த்துறை அலுவலர்களின் உள்ளிடோரிடம் நடவடிக்கை எடுக்குமாறு பல முறை கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து மொடக்கூர் பகுதியைச் சேர்ந்த மதியழகன் தெரிவிக்கும்போது, "நாங்கள் வசிக்கும் பகுதி நீராதாரமில்லாத வானம் பார்த்த பூமி. இப்பகுதியில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுவருகிறோம். இங்கு செம்மறி, வெள்ளாடு, மாடு, கோழிகள் வளர்த்து வாழ்க்கை நடத்தி வருகிறோம்.
அண்மை காலமாக ஆடுகளை மலைப்பகுதிகளில் வசிக்கும் நாய்கள் கடித்து குதறி சேதப்படுத்திவிடுகின்றன. இதனால் எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. ஓரிரு விவசாயி ஒருவருக்கு 10 செம்மறி ஆடுகள் பலியாவதால், தலா ரூ.20,000 வீதம் 2 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது" என்றார்.
சுட்டு கொல்ல வேண்டும்:பாலவிடுதி ஊராட்சி பொன்னாகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி குணசேகரன் கூறுகையில், "கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 75-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் வெறி நாய் கடித்து பலியாகி உள்ளன. இதை தடுக்க செல்லும் நபர்களையும் நாய்கள் மூர்க்கமாக தாக்குகின்றன. இதனால் பொதுமக்களும் அச்சத்தில் உள்ளனர். இந்த நாய்களை சுட்டு கொல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
முள்ளிப்பாடி ஊராட்சி சேர்வைக்காரன்பட்டி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி விவசாயி கூறுகையில், நாங்கள் மூன்று, நான்கு தலைமுறையாக விவசாயம் மேற்கொண்டு செய்துவருகிறோம். கால்நடை வளர்த்து வருகிறோம். இப்போது நடப்பதுபோல வெறி நாய்கள் அட்டகாசம் எப்போதும் நடந்ததில்லை. உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். உயிரிழந்த ஆடுகளுக்கு தலா 20,000 இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்றார். இந்த கால்நடை வளர்ப்போரின் கோரிக்கையை நமது ஈடிவி பாரத் செய்தியாளர் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரிடம் கொண்டு சேர்த்தார். ஆட்சியரும் உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க:இஸ்லாமியராக பிறந்து சிவபக்தரான ‘சித்தர் சிவஸ்ரீ படேசாஹிப்’ - அனைத்து மதத்தினரும் வழிபடும் ஓர் அதிசய கோயில்!