மழைக்காலங்களில் கொசுக்களால் ஏற்படும் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களில் இருந்து மனிதர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள கொசு வலைகளை பயன்படுத்துகின்றனர். மேலும் அஸ்ஸாம், சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் தோட்டங்களில் உள்ள கிணறுகளில் இலை தழைகள் விழாதவாறு தடுக்க பயன்படுத்தப்படுகிறது. தற்போது கேரளத்திலும் இந்தப் பாணியை விவசாயிகள் கடைபிடித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் தொழில் உற்பத்தி நகரமாக கரூர் மாவட்டம் விளங்குகிறது. இங்கு 90 விழுக்காடு கொசு வலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மீதமுள்ள 10 விழுக்காடு சேலம் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன. கரூரில் 200க்கும் மேற்பட்ட கொலைவலை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உள்ளன. இதில் நேரடியாக 50 ஆயிரம் தொழிலாளர்கள் வரை வேலை செய்து வருகின்றனர். மறைமுகமாக ஒன்றரை லட்சம் பேர் கொசு வலை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும் கொசு வலை விற்பனையில் சீனா, வங்கதேசம், நேபாளம், தைவான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் முன்னணியில் உள்ளன. இதற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் உள்நாட்டின் பிரதான சந்தைகளை ஆக்கிரமித்து இருப்பதே காரணம். இதுமட்டுமின்றி வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் இறக்குமதி வரி தளர்வு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, அஸ்ஸாம் அரசுகள் வெளிநாடுகளில் ரசாயனம் கலந்த கொசு வலைகளை இறக்குமதி செய்து இலவசமாக வழங்குகின்றன. இது போதாதென்று பிகார், சிலிகுரி, அஸ்ஸாம், பாட்னா, கொல்கத்தா, டெல்லி, கான்பூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள கொசுவலை நிறுவனங்களும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கைமாறி போய்விட்டன.
இதனால் கரூர் உற்பத்தியாளர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கரோனா பெருந்தொற்று காரணமாக கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக தொழில்கள் அடியோடு முடங்கிபோய் உள்ளன. இது குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் கரூர் மாவட்ட கொசுவலை சங்கத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான மலையப்பசாமி பகிர்ந்துள்ளதாவது:
கேள்வி:
கரோனா வைரஸ் தாக்கத்தால் கொசுவலை தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் என்ன?
பதில்:
1970ஆம் ஆண்டு மிகச் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த கொசுவலை தொழில் இன்று 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்தியாவுக்கே கொசுவலை என்றால் கரூர் என்று கூறும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது. உலகத்திலேயே கொசுவலை தயாரிப்பில் 12 முக்கிய தொழிலகங்கள் இருக்கின்றன. அந்த முக்கிய தொழிலகங்களில் இரண்டு கரூரில் அமைந்திருக்கிறது. எங்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்னை வேலையாட்கள் மட்டுமே.
கேள்வி:
நெதர்லாந்து நாட்டில் தயாரிக்கப்படும் கொசுவலைகள் ஆல்பா சைபர்மெத்ரின்(Alpha-cypermethrin)என்ற வேதிப்பொருள் மூலம் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா?
பதில்:
வேதிப்பொருள் என்பது மிகக் குறைந்த அளவிலே 100 கிலோ உற்பத்தி பொருளுக்கு அரை கிலோ மட்டும் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு நச்சு தன்மை வாய்ந்ததாக இருந்தாலும் மனிதனுக்கு எந்தவிதமான தீங்கும் ஏற்படாது என உலக சுகாதார நிறுவனம், பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளன. எனவே இதில் எந்த பாதிப்பும் இல்லை.
கேள்வி:
கொசுவலை உற்பத்தியாளர்களுக்கு ரீ-ஃபண்ட் வரி திரும்ப கிடைக்கிறதா?
பதில்:
மூலப் பொருள்களை வாங்கும்பொழுது 18 விழுக்காடு வரிவிதிப்பு உள்ளது. உற்பத்தி செய்த ஆடைகளை விற்கும் பொழுது வரி விதிக்கிறோம். இதனால் வாங்கும் போதும் விற்கும் போதும் ஏற்படும் வரி எங்களுக்கு சரியாகி விடுகிறது.
கேள்வி:
கொசுவலை உற்பத்தி கள்ளச்சந்தை வியாபாரம் நடைபெறுகிறதா?