தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழகத்தின் இரண்டாவது குழந்தை சாட்சியங்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் திறப்பு! - second Child Witness Protection Court inaugurated

நீதிபதிக்கு தனி வழி, குற்றவாளிக்கு தனி வழி, சாட்சிகளுக்கு தனி என குழந்தை சாட்சிகள் பாதுகாப்பு நீதிமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் இரண்டாவது குழந்தை சாட்சிகள் பாதுகாப்பு நீதிமன்றம் திறப்பு!
தமிழகத்தின் இரண்டாவது குழந்தை சாட்சிகள் பாதுகாப்பு நீதிமன்றம் திறப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2023, 10:57 PM IST

தமிழகத்தின் இரண்டாவது குழந்தை சாட்சிகள் பாதுகாப்பு நீதிமன்றம் திறப்பு!

கரூர்:கரூர்மாவட்டத்தின் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குழந்தை சாட்சியங்கள் விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்றம் (Centre for Examination of Child Vulnerable and Child Witness) கட்டடத்தினை இன்று (ஆகஸ்ட் 26) சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ்பாபு, ஆர்.சக்திவேல், பி.தனபால் ஆகியோர் கலந்துகொண்டு புதிய நீதிமன்ற விசாரணை கட்டடத்தினை திறந்து வைத்து சிறப்புரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் ஆர்.சக்திவேல், “கரூர் மாவட்டத்திற்கு தானும் குமரேஷ்பாபுவும் பொறுப்பு நீதிபதிகளாக இருக்கிறோம். கரூர் மாவட்டத்திற்கு வந்து தலைநகரில் உங்களை எல்லாம் சந்திக்கிற வாய்ப்பை பெற்றிருக்கிறோம். இந்த பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள் சாட்சிகளை விசாரிக்கக்கூடிய மையத்தின் தேவை என்ன?

இப்படிப்பட்ட ஒரு மையம் இருந்தால் தான் நாம் அப்படிப்பட்ட சாட்சிகளை விசாரிக்க முடியுமா?, இதற்கு முன்னால் இது போன்ற வழக்குகளை விசாரிக்கவில்லையா? என்று நினைக்கலாம். ஆனால் பாதுகாக்கப்பட்ட ஒரு குழந்தை நீதித்துறை வளாகத்தில் நல்ல சூழல் இருந்தால் தான், குழந்தைகள் பயப்படாமல் சாட்சி சொல்வார்கள்.

குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டது தான் இந்த மையம். இது நீதிபதிகள் புரிந்து கொள்ளும் அளவிற்கு பல நேரங்களில் குழந்தைகளின் சாட்சியங்கள் உறுதுணையாக இருந்திருக்கிறது. அப்படிப்பட்ட பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சாட்சியங்கள் மிக முக்கியமான சாட்சிகளாக வழக்குகள் வந்திருக்கும் போது அவர்களின் சூழ்நிலை சரியாக இல்லாமல் விசாரிக்க முடியாமல் போகும் போது நீதி பரிபாலனை சரியாக இல்லாமல் போய்விடும் என்ற காரணத்தால் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி ஒரு திட்டம் தீட்டப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் இது போன்ற மையங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரண்டாவது நீதிமன்றம்:திருவண்ணாமலை மாவட்டத்தில் முதலாவதாகவும், அதற்கு அடுத்தாக கரூர் மாவட்டத்தில் தான் இது போன்ற மையம் கட்டப்பட்டுள்ளது சிறப்பாகும். என்ன தவறு செய்தாலும் அந்த தவறை கண்டுபிடித்து தண்டனை வழங்குவதற்கு நமது இந்திய சட்டத்தில் பல்வேறு வகையான சட்டங்களை கொண்டு வருகிறது.

தனி மனிதனுக்கு எதிராகவும் சமூகத்திற்கு எதிரான குற்றங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள்,குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற நிறைய குற்றங்கள் அதனை சீர் திருத்த நமது சட்டமன்றங்கள், பாராளுமன்றங்கள் புதிய சட்டங்களை உருவாக்கி வருகிறது. குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தடுப்பதற்கான புதிய சட்டங்களை கொண்டு வருகிறார்கள் குறிப்பாக போக்சோ சட்டம்.

இது போன்ற தவறுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்குகளை தொடுக்கிறார்கள். குற்றம் நடந்ததிலிருந்து வழக்கு நடந்து முடியும்போது ஐந்து ஆண்டுகள் கூட நடக்கிறது அவ்வாறு நடக்கின்ற வழக்குகளில் கொண்டு வரப்படும் சாட்சியங்கள் சரியாக இருக்க வேண்டும். பல நேரங்களில் சாட்சிகள் பிரல் சாட்சிகளாக மாறிவிடுகிறது.

காப்பாற்றப்படும் குற்றவாளிகள்: ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக சாட்சி சொல்வதற்கு பயப்படாமல் சொல்வதற்கு ஒரு சூழ்நிலை உருவாக்க வேண்டும். குறிப்பாக குறுக்கு விசாரணை என்று வரும் பொழுது வழக்கறிஞர்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் கொஞ்சம் கூட பயப்படாமல் சாட்சி சொல்பவர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கிறார்கள்.

ஒரு சில வழக்குகளில் ஒரு சில சாட்சிகள் தான் நின்று பேசுகிறார்கள். அப்படி யாரெல்லாம் வழக்காடு மன்றத்திற்கு சாட்சி சொல்ல வருகிறார்களோ நீதியை நிலைநாட்ட வேண்டும், தவறு செய்தவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்று வரும் சாட்சிகளுக்கு குறைந்த பட்சம் பாதுகாப்பு என்ன என்று மனதில் தோன்றுகிறது. அதன் வெளிப்பாடு தான் இந்த விசாரணை மையம் அமைப்பதற்காக அடிகோலிட்டுள்ளது.

ஒரு தவறு நம் கண் முன்னாடியே நடந்த போது கூட அவன் சில நேரங்களில் தண்டனை பெறாமல் விடுதலை ஆகி வெளியே வரும்பொழுது, பொதுமக்கள் இவ்வளவு பெரிய தவறை செய்தவன் வெளியே வந்து விட்டான் என்று பேசும் அளவிற்கு நிலைமை ஏற்படுகிறது. அதற்கு நியாயத்தின் பக்கம் நின்று பேசுவதற்கு ஆள் இல்லை பேச வருபவர்களுக்கும் நல்ல சூழ்நிலை இல்லை ஆதங்கப்படுகின்ற சூழ்நிலை எல்லாம் இருக்கிறது.

தனி வழி:இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் மனதில் எண்ணிக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக இந்த நீதித்துறையின் மாண்பை நிலை நிறுத்துவதற்கு தான் என்று உயர்நீதிமன்றங்களும் உச்சநீதிமன்றங்களும் சுட்டிக்காட்டியதன் காரணமாகத்தான் இது போன்ற மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் நீதிபதிக்கு தனி வழி. குற்றவாளிக்கு தனி வழி, சாட்சிகளுக்கு தனி வழி. பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப்படக்கூடிய குழந்தை சாட்சிகளை விசாரிப்பதற்காக இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் சாட்சிகள் மற்றும் குற்றவாளிகள் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தனித்தனியே வந்து செல்லும் வகையில் வழி அமைக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரும் சாட்சி சொல்பவரும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளாத அளவிற்கு ஒலிவாங்கி மூலம் நீதிபதி விசாரிக்கும் வகையில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை சாட்சி குற்றம் சாட்டப்பட்டவரை நேரில் பார்த்து அடையாளம் சொல்ல வேண்டிய சூழ்நிலை வந்தால் மட்டுமே அந்த திரை விளக்கப்பட்டு இருவரும் நேருக்கு நேர் பார்க்கும் வகையில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஏறத்தாழ அரசு 3.30 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து இந்த மையத்தை அமைத்துக் கொடுத்துள்ளது தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என்று பேசினார். கூட்டத்தில் கரூர் முதன்மை மாவட்ட நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம், கரூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சி. ராஜலிங்கம் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் கரூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன், உள்ளிட்ட மாவட்ட நீதிபதிகள், வழக்கறிஞர் சங்க பிரதிநிதிகள் கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:ரயிலில் நெய் கொண்டு செல்ல தடையா? - என்னென்ன பொருட்களை ரயில் பயணத்தில் கொண்டு செல்லலாம்?

ABOUT THE AUTHOR

...view details