தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூரில் ஜல்லிக்கட்டு போட்டி: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்! - karur dmk

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மார்ச் 5ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

By

Published : Jan 22, 2023, 9:49 AM IST

கரூர்: கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது கொங்கு மண்டலத்தில் திமுக பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதனால், அக்கட்சி கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு பெறும் முனைப்பில் களமிறங்கி உள்ளது. கொங்கு மண்டலத்தில் திமுகவை வலுப்படுத்தும் பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டு உள்ளது.

கொங்கு மண்டலத்தில் உள்ள கோவை மாவட்டம் போக கரூரிலும் திமுகவை பலப்படுத்தும் பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கரூர் மக்களவைத் தொகுதி கூட்டணி கட்சியான காங்கிரஸ் வசம் உள்ளது.

கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட திமுக கட்சியினர் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கரூர் தொகுதியை திமுக வசம் கைப்பற்ற செந்தில் பாலாஜி போராடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கரூர் மக்களவைத் தொகுதியை திமுக வசம் கொண்டு வர அமைச்சர் செந்தில் பாலாஜி காய் நகர்த்தி வருவதாகவும், அதனால் செந்தில் பாலாஜி கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் ஜோதிமணி எம்.பிக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது. கோவை மாவட்டத்தில் தீவிர அரசியல் களப்பணியாற்றி வந்த செந்தில் பாலாஜி, தற்போது மீண்டும் கரூர் மாவட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

கரூர் மாவட்டத்தில் திமுகவை பலப்படுத்தும் விதமாகவும், அடுத்த ஆண்டு வர உள்ள மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும் முதல் முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இதற்காக நேற்று(ஜன.21), கரூர் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனைக் மேற்கொண்டுள்ளார். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மார்ச் 5ஆம் தேதி கரூரில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடக்க உள்ளதால், அதற்கான ஏற்பாடுகளை மிகப் பிரமாண்டமாக மேற்கொள்ளுமாறு கட்சி நிர்வாகிகளிடம் அவர் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தை கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதிகளிலும் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் திமுக சார்பில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ஊரே திருவிழாக் கோலம் பூண்டுள்ளது மேலும் பார்வையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:ஆன்மீக புரட்சியை ஏற்படுத்தும் அரசாக தமிழ்நாடு திகழ்கிறது - அமைச்சர் சேகர்பாபு

ABOUT THE AUTHOR

...view details