சமூக செயல்பாட்டாளர் ஜெகநாதனுக்கு வீரவணக்கம் செலுத்திய சமூக ஆர்வலர் முகிலன் உட்பட 13 பேர் கைது கரூர்: க.பரமத்தியில் கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடியதால் படுகொலை செய்யப்பட்ட விவசாயி ஜெகந்நாதனின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வீரவணக்கம் செலுத்த முயன்ற தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சமூக ஆர்வலர் முகிலன் மற்றும் சாமானிய மக்கள் நலக் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 13 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
கரூர் மாவட்டம் க.பரமத்தி பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரிகளால், விதிமுறை மீறி கற்கள் அதிக அளவில் வெட்டி எடுக்கப்படுவதாகவும், கல் குவாரி அனுமதி காலம் முடிந்தும் செயல்பட்டு வரும் கல் குவாரிகள் மீது கனிமவளத்துறை அரசு அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்கக் கோரியும், தி.மு.க கிளைச் செயலாளர் சமூக ஆர்வலர் விவசாயி ஜெகநாதன் தொடர்ந்து புகார் அளித்து வந்துள்ளார்.
இதன் காரணத்தினால் இவர், கடந்த ஆண்டு செப்டம்பர்10ஆம் தேதி, வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் ஜெகநாதனை கொலை செய்து வாகன விபத்து போல சித்தரித்த அம்மன் கல் குவாரி உரிமையாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும் இது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று (செப்.10) க.பரமத்தி பேருந்து நிறுத்தத்தில், உயிரிழந்த விவசாயி ஜெகநாதன் படத்திற்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி மறுத்து இருந்த நிலையில், க.பரமத்தி பேருந்து நிறுத்தத்தில் வீரவணக்கம் செலுத்த வந்த தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன் உள்ளிட்ட 13 பேரை க.பரமத்தி போலீசார் கைது செய்தனர்.
அப்பொழுது கரூர் மாவட்டத்தில் சமூக செயல்பாட்டாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை, சட்டவிரோத கல்குவாரி உரிமையாளர்களுக்கு தமிழக அரசு துணை போவது வெட்கக்கேடு என சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் சமூக ஆர்வலர் முகிலன் உள்ளிட்டோர் கோஷங்களை எழுப்பினர். அதைத் தொடர்ந்து போலீசார், வலுக்கட்டாயமாக முகிலனை கைது செய்து குண்டுக்கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றினர்.
மேலும் இந்த கைதில், சாமானிய மக்கள் நல கட்சியின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் குணசேகரன், கரூர் மாவட்ட செயலாளர் சண்முகம், மாவட்ட துணை செயலாளர் காளிமுத்து, திருச்சி வடக்கு மாநகர செயலாளர் மலர்மன்னன், நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் தியாகராஜன், சி.பி.எம்.எல் கட்சி கரூர் நிர்வாகி சுப்பிரமணி உள்ளிட்ட சுற்றுச்சூழல் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கைது சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:"கண்டிப்பு, தண்டிப்பு இல்லாததே மாணவர்கள் சீரழிவுக்கு காரணம்" - ஆசிரியர், மாணவர்கள் கலந்துரையாடலில் ஆளுநர் கருத்து!