தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிகாலை வரை செந்தில் பாலாஜி உள்ளிருப்புப் போராட்டம் - உள்ளிருப்பு போராட்டம் நடத்திய செந்தில் பாலாஜி

கரூர்: இறுதிநாள் பரப்புரை அனுமதியை வழங்கும் வரை அலுவலகத்தை விட்டு வெளியேற மாட்டேன் எனக் கூறி கரூர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி கரூர் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று அதிகாலை 2 மணி வரை உள்ளிருப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

Senthil Balaji, held sit-in protest till early morning seeking permission for the final day campaign
Senthil Balaji, held sit-in protest till early morning seeking permission for the final day campaign

By

Published : Apr 4, 2021, 10:07 AM IST

Updated : Apr 4, 2021, 11:06 AM IST

கரூர் நகரப் பகுதியில் அமைந்துள்ள திமுக கூட்டணி கட்சிகளின் தலைமைத் தேர்தல் பணிமனை உள்ளிட்ட 10 இடங்களில் இன்று இறுதிகட்ட பரப்புரையை நிறைவுசெய்ய திமுக சார்பில் கடந்த 30ஆம் தேதி கரூர் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.

ஆனால் இதுவரை காவல் துறை, தேர்தல் அலுவலர் அனுமதியை வழங்க தாமதப்படுத்திவருவதாகத் தெரிகிறது. அதேசமயத்தில் இறுதி நேரத்தில் அதிமுக வேட்பாளர் பரப்புரைசெய்ய ஒரே நபர் பெயரில் 10 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து விளக்கமளிக்குமாறு திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி கரூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இரவு 8 மணிக்குத் தொடங்கி இன்று அதிகாலை 2 மணி வரை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, "காவல் துணைக் கண்காணிப்பாளர் கரை வேட்டி கட்டிய கட்சியினரைப்போல ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்.

காலை 7 முதல் மதியம் வரை பரப்புரை மேற்கொள்ள விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளனர். மாலை 7 மணி வரை பரப்புரை மேற்கொள்ள அளிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

பரப்புரை மேற்கொள்ள அனுமதி வேண்டி சில நாள்களுக்கு முன்பு அளித்த விண்ணப்பத்திற்கும் எந்தவித பதிலும் அளிக்கப்படவில்லை. இதனைக் கண்டித்து நீதிமன்றத்தை நாட உள்ளோம்" என்றார்.

உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய செந்தில் பாலாஜி

கடந்த மக்களவைத் தேர்தலில் இறுதிநாள் பரப்புரையின்போது கரூர் வெங்கமேடு அருகே திமுக அதிமுகவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. எனவே ஒரே பகுதியில் இரு கட்சியினருக்கும் இறுதி நேரத்தில் பரப்புரை மேற்கொள்ள அனுமதிக்க முடியாது எனக் கரூர் நகர காவல் துறைத் தரப்பில் கூறப்படுகிறது.

Last Updated : Apr 4, 2021, 11:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details