முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அக்கட்சியில் ஏற்பட்ட சலசலப்பில், அதிமுகவில் இருந்து விலகி அமமுகவின் டிடிவி தினகரன் தலைமையை ஏற்று கட்சி மாறினார், செந்தில் பாலாஜி. கரூர் எம்.எல்.ஏ.வாக இருந்த செந்தில்பாலாஜி கொறடா உத்தரவை மீறியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அங்கிருந்து சில நாள்களில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையை ஏற்று திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
திமுகவில் இணைத்துக்கொண்ட 40 நாட்களில் செந்தில் பாலாஜிக்கு கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், கரூர் மக்களவை தொகுதியில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இரண்டு முறை அத்தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்ற ஜோதிமணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அத்துடன் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் செந்தில் பாலாஜி திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஒரே நேரத்தில் கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரவக்குறிச்சி இடைத்தேர்தல், மக்களவை தேர்தல் பணியை தான் வேட்பாளராக இருந்த போதும், செந்தில் பாலாஜி சிரத்தையோடு செய்தார். சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை வெற்றிபெறவும் வைத்தார். தொடர்ந்து, 2020ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் கரூர் மாவட்டத்தில் குறிப்பிட்டளவு கணிசமான இடங்களை திமுக கைப்பற்றியது.
ஸ்டாலின் புகழாரம்
கரோனா நிவராண பொருட்கள் வழங்குவது, திமுக மக்கள் கிராம சபை கூட்டம், விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என அனைத்து கட்சிப் பணிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள மாவட்ட செயலாளர்களுக்கு முன்னுதாரணமாக, செந்தில்பாலாஜி பணியாற்றி வருகிறார் என திமுக தலைவர் ஸ்டாலினால் புகழப்பட்டார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், தீவிர பரப்புரை மேற்கொண்டு கரூரில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நான்கு தொகுதிகளிலும் திமுகவை வெற்றி பெறச் செய்துள்ளார் செந்தில்பாலாஜி.